/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருந்து தொழிற்சாலைகளில் திடீர்... 'ரெய்டு'; போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி
/
மருந்து தொழிற்சாலைகளில் திடீர்... 'ரெய்டு'; போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி
மருந்து தொழிற்சாலைகளில் திடீர்... 'ரெய்டு'; போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி
மருந்து தொழிற்சாலைகளில் திடீர்... 'ரெய்டு'; போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி
ADDED : ஆக 22, 2024 02:13 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள சூழ்நிலையில், மருந்து தொழிற்சாலைகளில் உயர்ரக போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று போதை தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக புதுச்சேரி மாறியுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ள அதே வேளையில் போதை பொருட்களின் நடமாட்டமும் மெல்ல மெல்ல அதிகரித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு புதுச்சேரியில் வெறும் 0.06 கிராம், 2015ம் ஆண்டு 0.05 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் 2016ம் ஆண்டு 0.55 கிலோ மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு, 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டிற்கு பிறகு புதுச்சேரியில் கொஞ்சம் கொஞ்சாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது.
2017ல் 14.29 கிலோ, 2018ல் 13.12 கிலோ, 2019ல் 47.34 கிலோ, 2020ல் 107.23 கிலோ, 2021ல் 91.07 கிலோ, 2022ல் 87.93 கிலோ, கடந்தாண்டு 128.28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் மொத்தம் 480 வழக்குகள் போடப்பட்டு 527.02 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா மட்டுமின்றி புதுச்சேரியில் ெஹராயின், கோகைன் கூட பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 4.921கிலோ கிராம் ெஹராயின், கோகைன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதன் எதிரொலியாக கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவின்பேரில், சீனியர் எஸ்.பி., நாராதைசதன்யா, போதை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தனசேகரன், உதவி இன்ஸ்பெக்டர் ஜாமீர் உசைன், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ஜெனீபர் தலைமையிலான குழுவினர், நேற்று மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மருந்து தொழிற்சாலையில் அதிரடியாக சோதனை நடத்தினர். தொழிற்சாலைகள் மட்டுமின்றி குடோன்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த 2022ம் ஆண்டு முதல் எம்.டி.எம்.ஏ., எனப்படும் உயர் போதை பொருட்கள் 8.54 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்டசமாக கடந்தாண்டு 7.9 கிலோ எம்.டி.எம்.ஏ.,போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு இதுவரை 166 எல்.எஸ்.டி., போதை ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எம்.டி.எம்.ஏ., எஸ்.எஸ்.டி., போன்ற போதை பொருட்கள் சாதாரணமாக தயாரிக்க முடியாது. தொழிற்சாலைகளில் இருந்து மூலப்பொருட்கள் கிடைத்தால் மட்டுமே சாத்தியமாகும். இதுபோன்ற உயர் ரக போதை பொருட்கள் பார்மஸி தொழிற்சாலைகளில் தயாரித்து புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகின்றனர்.
இதன் காரணமாகவே திடீர் சோதனையை நடத்தியுள்ளனர். அடுத்தடுத்து பல மருந்து தொழிற்சாலைகளிலும் இந்த சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். தொழிற்சாலைகள் உற்பத்தி மட்டுமின்றி, புதுச்சேரியில் உயரக போதை கடத்தி வர சர்வதேச அளவில் நெட் ஒர்க் உள்ளது. இதுவரை 13 சர்வதேச போதை பொருள் குற்றவாளிகளும் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி மாநிலங்களை தாண்டி சர்வதேச அளவில் போதை பொருள் நெட் ஒர்க் உள்ளதால் உயரக போதை பொருட்கள் புதுச்சேரிக்குள் எளிதாக நுழைந்து விடுகிறது.
மருந்து தொழிற்சாலைகள் மட்டுமின்றி கடத்தி வரும் குருவிகளையும் கண்காணித்து இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க முடியும்.