ADDED : ஏப் 14, 2025 04:32 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நேற்று நடந்தது.
கிறிஸ்துவர்கள் ஏசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் 40 நாட்கள் தவகாலத்தினை கடைப்பிடிப்பது வழக்கம்.
தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்பட்டு, புனித வாரத்தின் துவக்க நாள் குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்பட்டு, சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகிறது.
அதன்படி, நேற்று புதுச்சேரி இருதய ஆண்டவர் பசிலிக்காவில் குருத்தோலை ஞாயிறு சிறப்பிக்கப்பட்டது. காலை 7:00 மணிக்கு அனைவருக்கும் குருத்தோலை மந்திரித்து ஆலயத்தை சுற்றி உள்ள தெருக்களில் பசிலிக்கா அதிபர் பிச்சைமுத்து தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது.
பெத்தி செமினார் மேல்நிலை பள்ளி துணை முதல்வர் சின்னப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
ஜென்மராகினி மாதா கோவிலில் புதுச்சேரி - கடலுார் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. இதேபோல், நெல்லித்தோப்பு விண்ணேற்பு மாதா கோவில், வில்லியனுார் லுார்து அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.