பள்ளி வளாகங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்; தி.மு.க., சிவா
பள்ளி வளாகங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்; தி.மு.க., சிவா
ADDED : செப் 11, 2026 06:03 PM
புதுச்சேரி: அரசு பள்ளி வளாகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என, தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி தற்போது போதை மாபியா கும்பலிடம் சிக்கி உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில், அரசு பள்ளி மாணவிகள் குடிபோதையில் இருந்ததாக செய்தி வெளியாகி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அமைதியான சூழலையும், கல்வி பாரம்பரியத்தையும் சீரழிக்கும் வகையில் நடந்துள்ள இந்த சம்பவம் புதுச்சேரி மக்களை உலுக்கி உள்ளது.
மாநிலத்தில் கஞ்சா தடையின்றி கிடைக்கிறது. மாணவ, மாணவிகளின் கைகளில் மது பாட்டியில் புழங்குவதற்கு காரணியாக இந்த சம்பவம் நடந்துள்ளது. அரசு கல்விக்கூடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிவிட்டது. இந்த சம்பவத்திற்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.
அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகம், கல்வித்து துறை அதிகாரிகள், போதைப்பொருள் வினியோகஸ்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளி வளாகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் மது மற்றும் போதைப்பொள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான மனநல ஆலோசனைகள், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்களை அரசு போர்க்கால அடிப்படையில் துவங்க வேண்டும். அரசு தொடர்ந்து அலட்சியமாக இருந்தால், மாணவர்களின் நலன் காக்க மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
