ADDED : மார் 06, 2024 03:15 AM
புதுச்சேரி : திருக்கனுார் ஏரி நீர்வரத்து வாய்க்காலில் அனுமதியின்றி பாலம் அமைத்ததை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு ராஜா வாய்க்காலில் இருந்து திருக்கனுார் சின்ன ஏரிக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்காலின் குறுக்கே, இரண்டு பாலங்கள் அமைக்கப்படுவதாக பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு திருக்கனுார் இளநிலை பொறியாளருக்கு புகார் வந்தது.
இதையடுத்து, இளநிலை பொறியாளர் ஜெயராமன் மற்றும் ஊழியர்கள் நேற்று அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில், செயற்பொறியாளரிடம் சிறிய அளவில் ஒரு பாலம் அமைப்பதற்கு மட்டும் அனுமதி பெற்று, இரண்டு பாலங்கள் அமைத்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து, இளநிலை பொறியாளர் நீர்வரத்து வாய்க்கால் குறுக்கே பாலம் அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தினார். இதனால், ஆத்திரமடைந்த பாலம் அமைத்தவர்கள், இளநிலை பொறியாளர் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

