/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கார்டு சேவைகள் நிறுத்தம்: பொதுமக்கள் அலைக்கழிப்பு
/
ரேஷன் கார்டு சேவைகள் நிறுத்தம்: பொதுமக்கள் அலைக்கழிப்பு
ரேஷன் கார்டு சேவைகள் நிறுத்தம்: பொதுமக்கள் அலைக்கழிப்பு
ரேஷன் கார்டு சேவைகள் நிறுத்தம்: பொதுமக்கள் அலைக்கழிப்பு
ADDED : மார் 16, 2024 06:11 AM

புதுச்சேரி: புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறையில் ரேஷன் கார்டுகள் சேவைகள் பணிகள் அனைத்தும் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 3,51,429 லட்சம் மஞ்சள்,சிவப்பு கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
சிவப்பு கார்டு வைத்துள்ளவர்களுக்கு மாநில அரசின் கொள்கை முடிவின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரிசிக்கான மானியத் தொகையை நேரடியாக வழங்கப்படுகிறது.
இதற்காக ஆண்டிற்கு 200 கோடி ரூபாய் வரை நேரடியாக வங்கி கணக்கில் மானியமாக செலுத்தப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகள் பூட்டப்பட்டு சூழ்நிலையில் மஞ்சள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஏதும் வழங்கப்படவில்லை.
இருப்பினும் பொங்கல் பரிசு, மழை நிவாரணம், கொரோனா நிவாரணத் தொகை அவ்வப்போது மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கும் அரசு ஆண்டுதோறும் பல கோடிகளை செலவிடுகிறது.
குடிமை பொருள் வழங்கல் துறையில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய கார்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுவது வழக்கம். ஆனால் இந்த ரேஷன் கார்டுகள் சேவைகள் பணிகள் அனைத்து கடந்த இரண்டு வாரமாக திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணமும் அறிவிக்கப்படாமல் அலுவலகமும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் குடிமை பொருள் வழங்கல் துறைக்கு தினமும் சென்று நடையாய் நடந்து, ஏமாந்து வருகின்றனர்.
மாநிலத்தில் ரேஷன்கார்டு வினியோகிக்கப்பட்ட விஷயத்தில் வறுமை சரியாக கணக்கிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. வசதிப் படைத்த பலர் ஏழைகள் வைத்திருக்க வேண்டிய சிவப்பு ரேஷன் அட்டைகளை புதுச்சேரியில் வைத்துள்ளனர்.
அதே நேரத்தில் ஏழைகள் பலரிடம் மஞ்சள் ரேஷன் அட்டைகள் உள்ளதாக குற்றச்சாட்டு தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது. மாநில மக்கள் தொகையை ஒப்பிடும்போது 6,34,390 பயனாளிகள் மட்டுமே நலத்திட்ட உதவிகள் பெற வேண்டும். ஆனால், இந்த எண்ணிக்கை தாண்டி சிவப்பு ரேஷன் கார்டு பயனாளிகள் உள்ளனர்.இவற்றை சரி செய்யும் வரை குடிமை பொருள் துறையின் அனைத்து ரேஷன் கார்டு சேவைகளும் நிறுத்தி,அறையை அதிகாரிகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் காரணத்தை பட்டியலிட்டு வருகின்றனர்.
இதனால்,பள்ளிகளுக்கு அட்மிஷன் நடந்து வரும் சூழ்நிலையில்,குழந்தைகளின் பெயர் சேர்த்தல்,திருத்தம் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்து வரும் பொதுமக்கள் கடும் ஏமாற்றத்திற்குள்ளாகி அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே, விண்ணப்பித்தவர்களுக்கும் புதிய ரேஷன் கார்டுகள் தயார் நிலையில் உள்ளபோதும்,தராமல் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர்.
தேர்தல் எப்போது முடிவது,அதுவரை பள்ளிகளில் மாணவர்களை சேர்க்காமல் இருக்க முடியுமா,உயர் கல்விக்கான சான்றிதழ்களை பெறாமல் இருக்க முடியுமா என நொந்துபோய் கேள்வி எழுப்பி வருகின்றனர். தேர்தல் நேரம் என்பதால் ரேஷன் கார்டுகளுக்கு நலத்திட்ட உதவிகளை நிறுத்திவிடுவது தப்பில்லை.புதிய ரேஷன் கார்டுகளை வழங்ககூட தேவையில்லை.ஆனால் பெயர் சேர்த்தல்,நீக்கம்,திருத்தம் உள்ளிட்ட அடிப்படை ரேஷன் கார்டுகளை சேவைகளை நிறுத்தி வைக்காமல் தொடரவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

