தமிழக சட்டசபை தேர்தல் : புதுச்சேரியில் வாகன போக்குவரத்து குறைவு
தமிழக சட்டசபை தேர்தல் : புதுச்சேரியில் வாகன போக்குவரத்து குறைவு
ADDED : ஏப் 23, 2026 07:01 PM
புதுச்சேரி: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி, புதுச்சேரியில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், நகரின் பிரதான சாலைகள் வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்பட்டன.
தமிழகத்தில் தேர்தல் நடந்தது. புதுச்சேரி மாநிலம் தமிழகத்துடன் நிலப்பரப்பைப் பகிர்ந்து கொள்வதாலும், ஆயிரக்கணக்கான தமிழகத் தொழிலாளர்கள் புதுச்சேரியில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களது ஓட்டை பதிவு செய்வதற்கு ஏதுவாகப் பல்வேறு நிறுவனங்கள் விடுப்பு அளித்திருந்தன.
புதுச்சேரியின் முக்கிய வணிகப் பகுதிகளான நேரு வீதி, காந்தி வீதி, காமராஜ் சாலை மற்றும் அண்ணா சாலைகளில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், பெரிய வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் காபி கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தன. தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு ஓட்டு பதிவு செய்வதற்காக சென்றனர்.
வழக்கமாகக் காலை முதல் நள்ளிரவு வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி சாலைகள் நேற்று வழக்கத்திற்கு மாறாகக் குறைவான வாகனப் போக்குவரத்துடன் காணப்பட்டன. தமிழகத்திற்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டாலும், நகருக்குள் இயங்கும் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து காணப்பட்டது.
தினமும் நெரிசலால் அவதிப்பட்டு வந்த உள்ளூர் மக்கள், சாலைகள் போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டதால் எவ்வித இடையூறுமின்றி பயணிக்க முடிந்தது. எனினும், உணவகங்கள் மற்றும் காபி கடைகள் மூடப்பட்டிருந்ததால் நகருக்கு வந்த ஒருசில சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உணவின்றிச் சற்று சிரமத்திற்கு ஆளாகினர்.
