/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி முதலிடம்
/
தேசிய கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி முதலிடம்
ADDED : ஏப் 16, 2025 10:12 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த 17 வயதிற்குட்பட்ட தேசிய கூடைப்பந்து போட்டியில் ஆடவர் பிரிவில் தமிழக அணி கோப்பையை வென்றது.
தேசிய கூடைப்பந்து (17 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்) போட்டி கடந்த 9ம் தேதி புதுச்சேரி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள ராஜிவ்காந்தி உள்விளையாட்டரங்கில் துவங்கியது.
இப்போட்டியில், ஆடவர் பிரிவில் 30 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் பங்கேற்றன. லீக் முறையில் போட்டிகள் நடந்தது. காலிறுதி போட்டிக்கு பின் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று நடந்த இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின.
அதில், ஆட்ட இறுதி நேரத்தில் ராஜஸ்தான் அணி 85 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில் தமிழக அணி 96 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்று, கோப்பையை தட்டிச் சென்றது. ராஜஸ்தான் அணி 2ம் பரிசையும், ஹரியானா 3ம் பரிசையும், டில்லி 4ம் பரிசை வென்றன. பெண்கள் பிரிவில் மகாராஷ்டிரா அணி முதல் பரிசையும், கர்நாடகா 2ம் பரிசையும், தமிழக அணி 3ம் பரிசையும், சத்தீஸ்கர் 4ம் பரிசை வென்றன.