ADDED : ஏப் 11, 2026 05:28 PM

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு ஓட்டுச்சாவடியில் கள்ள ஓட்டு போட்ட தமிழக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் பா.ஜ., சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், காங்., சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி நடந்த தேர்தல் மண்ணாடிப்பட்டு தொகுதியில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. ஜவகர் சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்ட 14வது ஓட்டுச்சாவடிக்கு மாலை 5 மணிக்கு வந்த நபர், மற்றொரு வாக்காளரின் பெயரில் கூறி ஓட்டு போட முயன்றார். அதற்கு, அங்கிருந்த காங்., வேட்பாளரின் முகவர் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருந்தபோத, அந்த வாலிபர் ஓட்டை பதிவு செய்தார்.
உடன் காங்., முகவர், அந்த நபரை பிடித்து ஓட்டுச்சாவடி முகவரிடம் ஒப்படைத்தனர். உடன் அங்கு வந்த ஒரு கும்பல், அந்த நபரை அதிகாரியிடம் இருந்து மீட்டு வெளியே அனுப்பி வைத்தது. அதனைக் கண்ட காங்., முகவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கள்ள ஓட்டு போட்டுவிட்டு தப்பி ஓடிய நபரை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம், தொரவி கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் பிரசாந்த் (எ) அரவிந்த்,31; என்பதும், பாரில் வேலை செய்து வருவது தெரிய வந்தது.
இதுகுறித்து அந்த ஓட்டுச் சாவடியின் காங்., முகவரான ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார், விதிகளை மீறி அரசு ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது (பிரிவு 172), அழைப்பாணைக்கு கீழ்படியாமை (பிரிவு 174) மற்றும் ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றியது (பிரிவு 319) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து, பிரசாந்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
