UPDATED : ஜூன் 16, 2026 07:42 PM
ADDED : ஜூன் 16, 2026 07:33 PM

வேப்பூர்: வேப்பூரில் மொபைல் போன் டவரில் ஏறி பகுதி நேர ஆசிரியர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திட்டக்குடி அடுத்த சன்னாசிநல்லுாரை சேர்ந்தவர் சேரன், 60; வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அடுத்த மாதம் பணி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக, பணி புரிவர்களை நிரந்தரம் செய்ய கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2025ம் ஆண்டு வேப்பூர் அடுத்த திருப்பயரில் கல்வித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அப்போதைய முதல்வர் ஸ்டாலின் வந்தார். அப்போது அவர் மொபைல் போன் டவரில் ஏறி பகுதி நேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதேபோல, காலை 10:00 மணியளவில் வேப்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகேயுள்ள, மொபைல் போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவரை சமரசம் செய்த போலீசார் காலை 10:30 மணியளவில் பாதுகாப்பாக மீட்டனர். அப்போது மயக்கமடைந்தவரை வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
