பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கு 'தினமலர் லட்சிய ஆசிரியர் விருது' வழங்கி கவுரவிப்பு
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கு 'தினமலர் லட்சிய ஆசிரியர் விருது' வழங்கி கவுரவிப்பு
ADDED : நவ 27, 2024 08:28 AM
புதுச்சேரி : தினமலர் சார்பில் 'லட்சிய ஆசிரியர்' விருது வழங்கும் விழா, புதுச்சேரியில் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 20 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, லட்சிய ஆசிரியர் விருது, பாராட்டு சான்றிதழ், நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
கல்வி செல்வத்தை குறைவின்றி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருது வழங்குவது போல், ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி 'தினமலர்' நாளிதழ் சார்பில், லட்சிய ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. வரப்பெறும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில், தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, லட்சிய ஆசிரியர் விருது வழங்கப்படும்.
இந்தாண்டிற்கான புதுச்சேரி தினமலர் நாளிதழின் லட்சிய ஆசிரியர் விருதிற்கு ஆகஸ்ட் மாதம் வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன.
இதனை நடுவர் குழு கவனமுடன் பரிசீலனை செய்து, மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய 20 ஆசிரியர்களை தினமலர் லட்சிய ஆசிரியர் விருதிற்கு தேர்வு செய்தது.
இவர்களுக்கு, 'லட்சிய ஆசிரியர்' விருது வழங்கும் விழா, புதுச்சேரி ஓட்டல் ஜெயராமில் நேற்று கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி 'தினமலர்' வெளியீட்டாளர் மற்றும் பதிப்பாசிரியர் கே.வெங்கட்ராமன், சேலம் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் டீன் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.
லட்சிய ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 20 ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. அவர்களுக்கு லட்சிய ஆசிரியர் விருது, பாராட்டு சான்றிதழ், ஸ்பெக்ட்ரா நினைவு பரிசு வழங்கப்பட்டது.
தினமலர் சார்பில் சேலம் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் டீன் செந்தில்குமார், கல்வியாளர் புகழேந்தி ஆகியோர் 20 லட்சிய ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினர்.
பாராட்டு
சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், 'தினமலர் வழங்கும் லட்சிய ஆசிரியர் விருது என்பது ஆசிரியர்களுக்கு மாநில, மத்திய அரசுகள் வழங்கும் விருதுகள் வரிசையில், ஒரு மைல்கல். சுடர்விளக்குகளான மாணவர்களை துாண்டிவிடும் பணியை ஆசிரியர்கள் எப்போதும் செய்ய வேண்டும். வகுப்பறையை தாண்டி ஒவ்வொரு மாணவர்களின் மனதில் நிற்பவர்களே ஆசிரியர்கள். அப்பணியை சரியாகவும், சிறப்பாகவும் செய்யும் லட்சிய ஆசிரியர்களை கண்டுபிடித்து விருது வழங்கி கவுரவப்படுத்தி வரும் தினமலர் நாளிதழுக்கு பாராட்டு' என்றனர்.
உணர்ச்சிமயம்
விருது பெற்ற ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர். ஆசிரியர்கள் எத்தனையோ விருதுகள் பெற்றிருந்தாலும், குடும்பத்தினர் முன்னிலையில் விருது பெற்றதால் உணர்ச்சிபூர்வமாக இருந்தனர்.
விருது பெற்ற ஆசிரியர்கள், 'மாணவ சமுதாயத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் எங்களைப் போன்ற ஆசிரியர்களை, லட்சிய ஆசிரியர்களாக தினமலர் அங்கீகரித்து விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதே லட்சியப் பாதையில் மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பயணிப்போம்' என உறுதிமொழியுடன் பெருமிதத்துடன் விடைபெற்றனர்.
