காங்., பாதயாத்திரையில் 'தள்ளு முள்ளு' அரியாங்குப்பம் தொகுதியில் பரபரப்பு
காங்., பாதயாத்திரையில் 'தள்ளு முள்ளு' அரியாங்குப்பம் தொகுதியில் பரபரப்பு
ADDED : பிப் 01, 2026 05:17 AM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் தொகுதியில், காங்., சார்பில் நடந்த பாதயாத்திரையில், இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட தள்ளு முள்ளு சம்பவத்தால், பரபரப்பு நிலவியது.
என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசை கண்டித்து, காங்., சார்பில், தொகுதி தோறும் பாதயாத்திரை நடந்து வருகிறது. அரியாங்குப்பம் தொகுதியில் நேற்று காலை 7:00 மணிக்கு பாதயாத்திரை துவங்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தொகுதியில், மாநில செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி ஒரு கோஷ்டியாகவும், அரியாங்குப்பம் வட்டார காங்., தலைவர் அய்யப்பன் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர். பாதயாத்திரைக்கு வரும் தலைவர்களை வரவேற்க தேங்காய்த்திட்டில், இரு தரப்பினரும் நின்றிருந்தனர்.
காலை 9:30 மணியவில், காங்., மேலிட தலைவர் பவன்கரே, மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மூத்த தலைவர் தேவதாஸ் உட்பட நிர்வாகிகள் வந்தனர்.
அப்போது, விஜயலட்சுமி ஆதரவாளர் ராஜாராமன், பாதயாத்திரை 7:00 மணிக்கு துவங்கும் என கூறிவிட்டு, 9:30 மணிக்கு வருகிறீர்களே என, கேட்டார். இதை, அய்யப்பன் தரப்பை சேர்ந்தவர்கள், எதிர்த்து பேசினர். அதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளு முள்ளாக மாறியது. அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.இந்த சம்பவம் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
