/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4 மாதங்களாகியும் பாட புத்தகம் வழங்கவில்லை அரசு பள்ளிகளில் கல்வித்தரம் பாதிக்கும் அபாயம்
/
4 மாதங்களாகியும் பாட புத்தகம் வழங்கவில்லை அரசு பள்ளிகளில் கல்வித்தரம் பாதிக்கும் அபாயம்
4 மாதங்களாகியும் பாட புத்தகம் வழங்கவில்லை அரசு பள்ளிகளில் கல்வித்தரம் பாதிக்கும் அபாயம்
4 மாதங்களாகியும் பாட புத்தகம் வழங்கவில்லை அரசு பள்ளிகளில் கல்வித்தரம் பாதிக்கும் அபாயம்
ADDED : ஆக 20, 2025 07:27 AM
பாகூர் : நடப்பு கல்வி ஆண்டு துவங்கி, நான்கு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக பாட புத்தகங்கள் வழங்கப்படாமல் இருப்பது, அரசின் மீது பல்வேறு விமர்சனங்கைளை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 236 அரசு தொடக்க பள்ளிகள், நடுநிலை - பிரிவில் 48; உயர்நிலை பிரிவில் -125; மேல்நிலை பிரிவில் - 60 என, மொத்தம் 469 பள்ளிகளில், சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்திற்கு என தனியாக கல்வி வாரியம் இல்லாத காரணத்தால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழக பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாட திட்டமும், மாகியில் கேரள பாடதிட்டம் பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், புதுச்சேரி அரசு பள்ளிகளில், கடந்த 2024-25 கல்வி ஆண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமலுக்கு வந்தது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செய்யும் வகையில், மாணவ - மாணவிகளுக்கு, சீருடை, நோட்டு, புத்தகம், சிறப்பு பஸ், சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு 'ஸ்கூல் பேக், ஷூ, டைரி ஆகியவையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால்,2025-26 கல்வி ஆண்டிற்கு பள்ளிகள் திறந்து 4 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இதுவரை பாட புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது. 8ம் வகுப்பில், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகம் வழங்கப்படவில்லை. அதே போல், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, கணிதம், இ.வி.எஸ்.., என இரண்டு பாடங்களுக்கும் இதுவரை புத்தகங்கள் வழங்கப்படவில்லை.
சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் 5, 8 உள்ளிட்ட வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அதனை மறு பதிப்பு செய்து விநியோகம் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் பின்பற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து பாட புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் ஏற்கனவே முதல் பருவ தேர்வு முடிந்து விட்ட நிலையில், வரும் 25ம் தேதி இரண்டாம் பருவ தேர்வு துவங்க உள்ள நிலையில், இதுவரை பாட புத்தகம் மாணவர்களுக்கு வழங்கபடவில்லை. ஆசிரியர்கள் இணையம் வழியாக பாட புத்தகத்தை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு தினசரி பாடம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் தங்களிடம் பாட புத்தகம் இல்லாததால், அவர்கள் சரியாக படிக்க முடியாமலும், ஆசிரியர்கள் கொடுக்கும் வீட்டு பாடங்களை முடிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், மாணவர்களின் கற்றல் திறன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மாணவர்களின் கல்விக்கு அடிப்படை தேவை பாட புத்தகங்கள். இந்த பாட புத்தகங்களை உரிய காலத்திற்குள் வழங்காமல், மாணவர்களுக்கான இலவச திட்டங்களை செயல்படுத்துவதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, அரசு இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி, மாணவர்களின் கல்வி பாதிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.