தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் எதிரொலி: புதுச்சேரியில் அக்.4 முதல் தடை உத்தரவு
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் எதிரொலி: புதுச்சேரியில் அக்.4 முதல் தடை உத்தரவு
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 09:04 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலையொட்டி புதுச்சேரியில் வரும் வரும் 4-ம் தேதி முதல் 7 ம்தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் 6ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை 9ம் தேதி நடைபெறவுள்ளது.இத்தேர்தலில் ஓட்டுப்பதிவு நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவும், தேர்தல் நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, புதுச்சேரி மாவட்டத்தில் பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டப் பிரிவு 163-இன் கீழ் 4ம் தேதி மாலை 6 மணி முதல் 7ம் தேதி காலை 6 மணி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
எனவே, சட்டவிரோதக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. இத்தடை உத்தரவானது பொதுமக்கள் வழக்கமான தொழில்கள் மற்றும் வேலைகளைச் செய்வதற்கும், வாக்களிக்கச் செல்வதற்கும், தனிப்பட்ட நிகழ்ச்சிகள், இறுதிச் சடங்குகள் ஆகியவற்றிற்கும் பொருந்தாது. மேலும், 5 நபர்களுக்கு மிகாமல் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வதற்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி தொகுதியைச் சாராத அரசியல் நிர்வாகிகள், வேட்பாளர்கள், தேர்தல் பிரச்சாரம் செய்பவர்கள் மற்றும் பிரச்சாரப் பணியாளர்கள் தேர்தல் அல்லது கட்சிப் பணிகளுக்காகத் தொடர்ந்து தொகுதியில் தங்கியிருக்கக் கூடாது. தேர்தல் களத்தில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.
தேர்தல் தொடர்பான எந்தவொரு கருத்துக் கணிப்பு அல்லது ஆய்வுகளின் முடிவுகளை மின்னணு ஊடகங்களில் ஒளிபரப்பவோ, காட்சிப்படுத்தவோ கூடாது.
ஓட்டுப்பதிவு நாளான 6ம் தேதி ஓட்டுச்சாவடிக்குள் ஆயுதங்களைக் கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவானது சட்டம்-ஒழுங்கு அமலாக்கம், தேர்தல் நடத்துதல் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பொருந்தாது.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
