/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி படுகொலை வழக்கில் கைதானவர் தற்கொலை முயற்சி?
/
சிறுமி படுகொலை வழக்கில் கைதானவர் தற்கொலை முயற்சி?
ADDED : மார் 12, 2024 05:23 AM
புதுச்சேரி, : புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நபர் சிறையில் தினமும் தற்கொலைக்கு முயற்சித்தாக தகவல் வெளியானது. ஆனால், இத்தகவலை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி மாயமானர். போலீசார் வழக்கு பதிவு தேடினர். 5ம் தேதி கழிவுநீர் வாய்க்காலில் கை கால்கள் கட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக முத்தியால்பேட்டையைச் சேர்ந்த விவேகானந்தன், 57; கருணாஸ், 18; ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை எழுப்பினர். புதுச்சேரி முழுதும் மக்கள் ஆங்காங்கே மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றம் அழைத்து வந்தால், பொதுமக்கள் தாக்கக் கூடும் என்பதால், சிறப்பு அனுமதி பெற்று காலாப்பட்டு மத்திய சிறைக்கு நீதிபதி வரவழைக்கப்பட்டு, இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விவேகானந்தன் மற்றும் கருணாஸ் இருவரையும், மற்ற விசாரணை கைதிகளுடன் சிறையில் அடைத்தால், அடித்து கொலை செய்து விடுவர் என்ற தகவல் வெளியானது. இதனால், கருணாஸ், விவேகானந்தன் இருவரையும் சிறை நிர்வாகம் தனி சிறையில் அடைத்து கண்காணித்தது.
சிறையில் அடைக்கப்பட்ட விவேகானந்தன், தன்னை தானே தாக்கி கொள்வதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தற்கொலை செய்து கொள்ள போவதாக பேசி வந்துள்ளார். விவேகானந்தன் ஏதேனும் செய்து கொண்டால் உடனே தெரிவிக்க வேண்டும் என சக கைதியான கருணாசிடம் சிறை காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் குளிக்கும்போது குளியல் சோப்பை விவேகானந்தன் விழுங்க முயற்சித்தார்.
அதனை சிறை காவலர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர். நேற்று தன்னுடைய சட்டை துணியால் கழுத்தை நெறித்து கொள்ள முயற்சித்தார். இதையும் சிறை காவலர்கள் தடுத்ததாக தகவல் பரவியது.
இந்த நிலையில், சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிறை கைதி விவேகானந்தன் சிறையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் ஏதும் நடைபெறவில்லை. சிறை காவலர்கள் தொடர்ந்து விவேகானந்தனை கண்காணித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை
ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை, ஜிப்மர் நிர்வாகம் சார்பில் சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கை விசாரிக்கும் எஸ்.பி. லட்சுமி சவுதன்யாவிடம் நேற்று சீலிடப்பட்ட கவரில் வழங்கப்பட்டது.

