/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
/
பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
ADDED : மார் 02, 2024 10:51 PM
புதுச்சேரி அரசில் 2004ம் ஆண்டிற்கு முன் சேர்ந்தவர்களுக்கு ஜி.பி.எப்., எனப்படும் பழைய ஓய்வூதிய திட்டமும், அதன் பின் சேர்ந்தவர்களுக்கு என்.பி.எப்., எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதிய பலன்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இதுமட்டுமின்றி பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்படுகின்றது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்களிப்பு செலுத்தினாலும், ஓய்வூதியம் கிடைக்காது.
இதேபோல் காரைக்கால் கல்வியியல் கல்லுாரியில் பணிபுரியும் 5 பேராசிரியர்கள் 2004ம் ஆண்டிற்கு முன் சேர்ந்திருந்தாலும் அவர்களுக்கு சி.பி.எப்., எனப்படும் பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
இதன் மூலம் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதனை எதிர்த்து ஐந்து பேராசிரியர்கள் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து இருந்தனர். இவ்வழக்கு அண்மையில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்கள் பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி திட்டமான சி.பி.எப்., திட்டம் வேண்டும் எனகையெழுத்திட்டு உள்ளனர். எனவே ஜி.பி.எப்., திட்டத்தின் கீழ் பலன் கேட்க முடியாது என, வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யூ, மனுதாரர்கள் 2004ம் ஆண்டிற்கு முன் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களை இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தான் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது.
எனவே பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் சேர்த்து பழைய ஓய்வூதிய பலன்களை பெற தகுதியுடையவர்கள். இதுமட்டுமின்றி அரசு ஊழியர்கள் ஜி.பி.எப்., திட்டத்தில் சேர நிதி ஒதுக்கப்படுவதில்லை எனவும் வாதிட்டார்.
இரண்டு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மஞ்சுளா, மனுதாரர்களான பேராசிரியர்களை எட்டு வாரத்திற்குள் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்க்கவும், அரசானதுநிதி துறையை அணுகி பங்களிப்பு செய்யவும் உத்தரவிட்டார்.
சி.பி.எப்., எனப்படும் பங்களிப்பு வருங்கால வைப்பு நிதியை 1988ம் ஆண்டே மத்திய அரசு விட்டுவிட்டது. ஆனாலும் புதுச்சேரி அரசு இன்னும் அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தி வருகிறது. இச்சூழ்நிலையில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு, புதுச்சேரி அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

