/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளைய சமுதாயத்தால் மட்டுமே நாடு மேம்படும்: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கருத்து
/
இளைய சமுதாயத்தால் மட்டுமே நாடு மேம்படும்: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கருத்து
இளைய சமுதாயத்தால் மட்டுமே நாடு மேம்படும்: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கருத்து
இளைய சமுதாயத்தால் மட்டுமே நாடு மேம்படும்: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கருத்து
ADDED : டிச 31, 2025 04:57 AM

புதுச்சேரி: நாடு மேம்பட இளைய சமுதாயத்தால் மட்டுமே சாத்தியம் என, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மூலக்குளம் பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் புதிய சீனியர் செகன்டரி பிளாக் கட்டடம் திறப்பு விழா நடந்தது. பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் வரவேற்றார். புதிய கட்டடத்தை துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து, மலேஷியாவில் நடந்த காமன்வெல்த் சதுரங்கப்போட்டியில் தங்கம் வென்ற மாணவர் ராகுல் ராமகிருஷ்ணனுக்கு சிறப்பு விருது வழங்கி பேசியதாவது:
நமது நாடு அனைத்து நிலையிலும் மேம்பட்ட நிலையை அடைய வேண்டும். அது, இளைய சமுதாயத்தால் தான் சாத்தியம். கல்வி ஒருவருக்கு அழியாத செல்வம். மாணவர்கள் கல்வியை ஆர்வமாக கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களை உயர்த்தும். நீங்கள் உயர்ந்தால், உங்களை சார்ந்த சமூகம் உயரும். சமூகம் உயரும்போது நாடும் தானாக உயரும்.
இந்த பள்ளி கடந்த 184 ஆண்டுகளாக ஒழுக்கம், அறநெறி என பன்முக தன்மை வாய்ந்த சிறந்த குடிமக்களை, நாட்டிற்காக உருவாக்கியுள்ளது. கல்வி என்றால் என்னவென்று தெரியாத காலத்தில் இருந்து, கல்வி கற்பதினால் மட்டும் தான் ஒரு மனிதன் சிந்தனையால் சிறக்க முடியும் என்று இப்பள்ளி கல்வியை கற்பித்து வருகிறது.
கல்வி தவிர வேறு எதுவும் பெரிதல்ல என்கிற பள்ளியின் குறிக்கோள், பள்ளிக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஏற்ற ஒரு சிந்தனை. சிறிய அளவில் துவக்கி இன்று பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது. மகத்தான கட்டடங்களுடன் வளர்ந்திருக்கிறது. இங்குள்ள நவீன வகுப்பறைகள், சோதனைக்கூடங்கள் மூலம் மாணவர்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளமுடியும் என்றார்.
விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சிவசங்கர் எம்.எல்.ஏ., பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், புதுச்சேரி - கடலுார் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

