/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காட்டுக்குப்பத்தில் விளையாட்டு திடல் கிராம மக்கள் கோரிக்கை
/
காட்டுக்குப்பத்தில் விளையாட்டு திடல் கிராம மக்கள் கோரிக்கை
காட்டுக்குப்பத்தில் விளையாட்டு திடல் கிராம மக்கள் கோரிக்கை
காட்டுக்குப்பத்தில் விளையாட்டு திடல் கிராம மக்கள் கோரிக்கை
ADDED : நவ 21, 2024 05:38 AM

பாகூர்: காட்டுக்குப்பம் கிராமத்தில், விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகூர் தொகுதி, காட்டுக்குப்பம் கிராமத்தில் விளையாட்டு திடல் இல்லாததால், அப்பகுதி இளைஞர்கள், வயல்வெளிகள் மற்றும் தெருக்களில் விளையாடினர். முதியவர்கள் சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது, வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கி காயமடைந்து வந்தனர்.
இதனால், காட்டுக்குப்பம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளவும், முதியவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில், பொது விளையாட்டு திடல் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காட்டுக்குப்பம் குடியிருப்புப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள பிப்டிக் தொழிற்பேட்டையில் புதர் மண்டிக் கிடந்த ஒரு பகுதியை, அப்பகுதி மக்கள் சீரமைத்து விளையாட்டு திடலாக மாற்றி, வாலிபால், பேட்மிட்டன், கிரிக்கெட் விளையாடினர். உடற்பயிற்சி, நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் அந்த இடத்தை மீட்பதற்காக, தொழில் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால், அங்கு எந்த வித மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. சிறிய அளவில் உள்ள விளையாட்டு திடல் என்பதால், மழை காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் பல நாட்கள் ஆகியும் வடியாமல் உள்ளது.
விளையாடுவதற்கும், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் இளைஞர்கள், பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது.
எனவே, காட்டுக்குப்பத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய இடத்தில், விளையாட்டு திடல் அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

