/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியை வளப்படுத்திய காவிய நாயகிகள் பங்காரி-சிங்காரி; வறண்ட ஏரியை மீட்டெடுத்து பாசனத்திற்கு அர்ப்பணித்த வரலாறு
/
புதுச்சேரியை வளப்படுத்திய காவிய நாயகிகள் பங்காரி-சிங்காரி; வறண்ட ஏரியை மீட்டெடுத்து பாசனத்திற்கு அர்ப்பணித்த வரலாறு
புதுச்சேரியை வளப்படுத்திய காவிய நாயகிகள் பங்காரி-சிங்காரி; வறண்ட ஏரியை மீட்டெடுத்து பாசனத்திற்கு அர்ப்பணித்த வரலாறு
புதுச்சேரியை வளப்படுத்திய காவிய நாயகிகள் பங்காரி-சிங்காரி; வறண்ட ஏரியை மீட்டெடுத்து பாசனத்திற்கு அர்ப்பணித்த வரலாறு
ADDED : நவ 23, 2025 05:13 AM

பாகூரின் பரம்பரை மணம் கமழும் கோவில் தெருக்களில், காற்றின் இசையில் கூட பக்தியின் மவுனத்தை உணரமுடியும். அந்தத் தெய்வீக சூழலில் வாழ்ந்த இரண்டு அரிய முத்துக்கள் தான் சிங்காரி மற்றும் பங்காரி. நாட்டிய சகோதரிகளான, இவர்கள் சாதாரண பெண்கள் அல்ல. கருணையை கரமாக கொண்ட தெய்வங்கள் போல பூமியில் நடந்தவர்கள்.
தண்ணீர் சூழ்ந்து உயிர்ப்புடன் இருந்த கடம்ப மரங்கள் நிறைந்த கடம்பேரி, அக்காலத்தில் பாகூர் மற்றும் சுற்றிலுள்ள மக்களுக்கும் உயிர்களுக்கும் அட்சயபாத்திரம். ஆனால் காலம் கடம்பேரியை கருணையற்ற வெயிலிடம் ஒப்படைத்து விட்டது. ஏரி உயிர் பிழைத்திட போராடியது.
உழைத்த மக்களின் கண்கள், வானத்தை பார்த்து தண்ணீருக்காக ஏங்கின. வறண்டு ஏரியில் மண்ணும் மனிதரும் ஒரே துயரத்தை பகிர்ந்து கொண்டனர்.
அந்த வேளையில் இந்த இரண்டு சகோதரிகள் மட்டும் தான் ஏரியின் அழுகையை கேட்டு மனம் உருகினர். சிங்காரி, கருணை இதமாகக் கண்ணில் பொங்க, ஏரியை நோக்கி சென்றாள். நான் இருப்பது வரை உன்னை உயிரோடு எழுப்புவேன் என்றாள்.
அதன் பின் நடந்தவை, ஒரு மகாராணி செய்யும் பணிகளையும் தாண்டியது. ஏரியை ஆழப்படுத்த, மண்ணின் உள்ளத்தில் புதைந்திருந்த ஈரத்தை மீண்டும் சுவாசிக்க வைத்தாள். 8 கி.மீ., துாரத்திற்கு கரைகளை பலப்படுத்தி, கடம்பேரியின் உயிர் துளிகளை மீண்டும் காக்கும் கோட்டையாக மாற்றினாள். நீர் பிடிக்கும் பகுதியை விரிவாக்கி, வயலின் நரம்புகளில் நீர் ஓட, 5000 ஏக்கர் நிலம் பசுமையின் உச்சந்தலையில் மலர்ந்தது. சிங்காரியின் பரிவால் மீண்டும் ஏரி உயிர் பெற்றது.
அக்கா ஏரியை உயிர்ப்பித்தாள் என்றால், அவளது தங்கையான பங்காரி, ஆற்றுக்கு ஓட்டம் தந்தாள். பங்காரி தனது கண்களை தென்பெண்ணையாற்றின் ஓட்டத்தில் நிறுத்தி, அதன் வலிமையான பாய்ச்சலை கடம்பேரிக்கு வழி நடத்த முடிவு செய்தாள். அவள் தனக்கே உரிய உறுதியுடன், 13 கி.மீ., நீளத்திற்கு கால்வாயை வெட்டினாள்.
அருகில் ஒரு திடமான கலிங்கலும் கட்டி, ஏரிக்கு வருவது மழை மட்டுமல்ல ஒரு ஆற்றின் இருதயத் துடிப்பையும் சேர்த்தாள். இன்று அந்த கால்வாய், பங்காரியின் இனிய நினைவாக பங்காரி வாய்க்கால் என்று நீர்த் துளிகள் தானே சொல்லிக் கொள்கின்றன. இந்த இரண்டு பெண்களின் முயற்சிகளின் நிழலாக, அவர்களுக்கு துணை நின்றவன் ஏரமடி. ஏரியின் கரையோடு உயிர் சேர்ந்தவன். அதன் மூச்சின் அலைவரிசையும் கூட அவனுக்குத் தெரியும்.
ஆனால் ஒரு மங்கலான காலையில், அதே ஏரியில் சிங்காரி, பங்காரி இருவரும் உயிரற்ற உடல்களாக மிதந்தபோது, ஏரமடியின் இதயம் முற்றிலும் சிதைந்தது. அவள்களின் கனவு, கொடை, அன்பு எல்லாம் ஒரே நொடியில் நீரின் அலையில் கலைந்து போனது.இதனால் வெகுண்ட ஏரமடி, அனைவரையும் பழிவாங்கி, பின்னர் அந்த ஏரியின் கரையில் கருங்கல்லாய் உறைந்து காவலனாகி விட்டான்.
அவரை மக்கள் ஏரமடி ஐயனார் என மரியாதையுடன் அழைக்கின்றனர். காலம் அழிக்க முடியாத சிலைகள் கடம்பேரியின் வடக்குப் படிக்கட்டில், நீரின் மட்டம் தொடும் உயரத்தில், 1844ம் ஆண்டில் செதுக்கப்பட்ட அந்த இரு சகோதரிகளின் புடைப்பு சிற்பங்கள் இன்றும் நிழலாக நிற்கின்றன. அருகே, கரையை நோக்கி அமைதியாக நிற்கும் ஏரமடியின் உருவமும், அவர்களின் கனவை இன்னும் காக்கிறது.இது நாட்டுப்புறக்கதை என்கின்றனர். ஆனால் கல் சொல்கிறது, நீர் சொல்கிறது, கிராம மக்கள் சொல்கிறார்கள். இது இரு பெண்களின் உண்மை வீரக்கதை.
கடம்பேரியின் அலைகள் ஒவ்வொரு முறையும் கரையை முத்தமிடும் போது, பங்காரி, சிங்காரி இருவரின் நிழல்கள் பசுமையைத் தொடும் காற்றில் இன்னும் நடக்கின்றன.

