/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனம் மாறுவார்களா மக்கள் பிரதிநிதிகள் வழிகாட்டுகிறார் கவர்னர்
/
மனம் மாறுவார்களா மக்கள் பிரதிநிதிகள் வழிகாட்டுகிறார் கவர்னர்
மனம் மாறுவார்களா மக்கள் பிரதிநிதிகள் வழிகாட்டுகிறார் கவர்னர்
மனம் மாறுவார்களா மக்கள் பிரதிநிதிகள் வழிகாட்டுகிறார் கவர்னர்
ADDED : செப் 29, 2024 05:00 AM
மக்கள் நலன் மற்றும் பொது சுகாதாரத்திற்காக நலவழித்துறைக்கு புதுச்சேரி அரசு இந்தாண்டு ரூ. 1111.10 கோடி வரை ஒதுக்குகிறது.
அரசு பொது மருத்துவமனை, காமராஜர் கல்வி சங்கம் மூலம் இயங்கும் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, மகாத்மா காந்தி பல் மருத்துவ மேல்படிப்பு மையம், இதுதவிர 33 ஆரம்ப சுகாதார நிலையம், நெஞ்சக நோய் மருத்தவமனை, சமுதாய நல வழி மையம், தாய் சேய் துணை சுகாதார மையம் என ஏராளமான மருத்துவ கட்டமைப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் தோறும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு, வலு சேர்க்கும் வகையில், கவர்னர் கைலாஷ்நாதன் செயல்பட்டு வருகிறார். அவர், கவர்னராக பொறுப்பேற்க வந்தபோது, உடன் வந்த உறவினர் ஒருவருக்கு உடல்நிலை பாதித்தது. உடன், அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
அடுத்த சில தினங்களில், உடல்நிலை பாதித்த தனது பேத்தியை, அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தார். மறுநாள் குணமடைந்ததும், பேத்தியை வீட்டிற்கு அழைத்து சென்றார். கடந்த வாரம், அவருக்கு பல் வலி ஏற்பட்டது. உடன், கோரிமேடு மகாத்மா காந்தி பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு மையத்தில் சிகிச்சை பெற்றார்.
அரசு மருத்துவமனை மீதும், அங்கு அளிக்கும் சிகிச்சை மீது கவர்னருக்கு இருக்கும் நம்பிக்கை, நம்மாநிலத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு இருப்பதில்லை. சாதாரண காய்ச்சலுக்கு கூட, சென்னையில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். அந்த சிகிச்சைக்கான பணத்தை அரசிடம் சமர்ப்பித்து வாங்கி கொள்கின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என, மேடைக்கு மேடை பேசும் ஆட்சியாளர்கள், காய்ச்சல் வந்தால் சென்னைக்கு ஓடிச் செல்வது வியப்பாக உள்ளது.
எனவே, கவர்னரை பின்பற்றி மக்கள் பிரதிநிதிகளும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால், மருத்துவமனைகளின் கட்டமைப்பு மேம்படும். அதன்மூலம் பாமர மக்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்கும்.