/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீரம் செறிந்த போலீஸ் தலைமையகம் அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
/
வீரம் செறிந்த போலீஸ் தலைமையகம் அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
வீரம் செறிந்த போலீஸ் தலைமையகம் அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
வீரம் செறிந்த போலீஸ் தலைமையகம் அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
ADDED : டிச 15, 2024 05:53 AM

புதுச்சேரி கடற்கரையோரத்தில் கம்பீரமாக நிற்பது போலீஸ் தலைமையக கட்டடம். வீரம் செறிந்த வரலாற்றை கொண்ட இந்த கட்டடத்திற்கு புதுச்சேரியின் வரலாற்றின் தனி இடம் உண்டு.
இன்றைக்கு தான் இது போலீஸ் தலைமையகம். ஆனால், அக்காலத்தில் முதல் முதலில் கடற்படை வணிகஸ்தலம் என்ற பெயரில் இந்த இடம் தனது முதல் அத்தியாயத்தை துவங்கியது.
கடல் வழியாக புதுச்சேரிக்கு வந்த கடற்படைவீரர்கள், கொண்டு வரும் ஆயுதங்களை பாதுகாப்பாக வைக்க ஒரு இடம் பிரெஞ்சியருக்கு தேவைப்பட்டது. அது கடற்கரை பக்கத்தில், அதுவும் துறைமுகத்தில் பக்கத்தில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என, கருதினர்.
அதற்கு கடற்கரை வணிகஸ்தலமாக இருந்த இடத்தினை, ஆயுத கிடங்காக மாற்ற பிரெஞ்சு அரசு முடிவு செய்து, 1767ல் ஒருவழியாக கடற்படை வணிக ஸ்தலத்தில், ஆயுத கிடங்கு கட்டடத்தை கட்டினர். அதனை ஆர்சனல் தெ லா மரைன் என, அதாவது கடற்படை ஆயுத கிடங்கு என்ற பெயரில் அழைத்து வந்தனர்.
பிரெஞ்சியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் அடிக்கடி போர்மேகம் சூழ்ந்த சூழ்நிலையில் வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, 1820ம் ஆண்டு படை வீரர்கள் முகாமாக, அதாவது சிப்பாய்களின் குடியிருப்பாக மாற்றப்பட்டது.
ஆனால் இடம் போதுமானதாக இல்லை. எனவே 1853ல் துமாஸ் வீதியில் மேற்கு பகுதியில் இருந்த தனியார் இடத்தை, பிரெஞ்சியர் அரசு கூடுதலாக வாங்கி படை வீரர்களின் இடத்தை விரிவுப்படுத்தியது. போர் வீரர்களுக்கு பயிற்சியும் அளித்தது.
இந்தியாவுடன் புதுச்சேரி இணைக்கப்படும் வரை இந்த இடம் படை வீரர்கள் முகாமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
அதனால் தான் தெற்கில், கிழக்கு மேற்காக செல்லும் சிறிய சாலைக்கு கசேர்ன் வீதி என்று பெயரும் வந்தது. கடந்த 1907ல் கடற்கரை சாலையில் இருந்த கொமிசேர் த பொலிஸ் அலுவலகம் - கசேர்சன் தெ சிப்பாயி என்று தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அது முதல் இன்றும் போலீஸ் தலைமை அலுவலகமாக திகழ்ந்து சட்ட ஒழுங்கை பராமரிக்கும் அதிகாரமிக்க உச்ச இடமாக ஆளுமையை செலுத்தி மக்களை அரணாக பாதுகாத்து வருகிறது.