/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அரசின் சின்னமாக மாறிய ஆயி மண்டபத்தின் வரலாறு
/
புதுச்சேரி அரசின் சின்னமாக மாறிய ஆயி மண்டபத்தின் வரலாறு
புதுச்சேரி அரசின் சின்னமாக மாறிய ஆயி மண்டபத்தின் வரலாறு
புதுச்சேரி அரசின் சின்னமாக மாறிய ஆயி மண்டபத்தின் வரலாறு
ADDED : டிச 08, 2024 04:46 AM

புதுச்சேரி பாரதி பூங்காவின் அடர்ந்த மரங்களுக்கு நடுவில் வெண்ணிற காவிய மண்டபாக இருப்பது ஆயி மண்டபம். இது புதுச்சேரி மாநில அரசின் சின்னமாகத் திகழ்கிறது. கிரேக்க - ரோமானிய கட்டடக்கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுச்சின்னம் 16ம் நுாற்றாண்டில் வாழ்ந்த ஆயி என்ற தாசி, குளம் வெட்டி குடிநீர்ப் பஞ்சம் தீர்த்த மக்கள் தொண்டின் நினைவைப் போற்றும் வகையில் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த நினைவு சின்னம் எழுப்பப்பட்ட வரலாற்று பின்னணி சுவராசியமானது. விஜய நகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் தமது ஆளுகைக்குட்பட்டிருந்த புதுச்சேரியை பார்க்க வரும்போது முத்தரையர்பாளையத்தில் சிறிய விளக்கொளியில் ஜொலித்த பெருமாள் கோவிலை கண்டு வணங்கினார்.
ஆனால், அவர் வழிப்பட்டது கோவில் அல்ல. அது தாசி ஆயியின் இல்லம். தாசியின் இல்லத்தைக் கண்டு மன்னர் கும்பிடுவதைக் கண்ட சிலர் நகைக்க உண்மை அறிந்து கிருஷ்ணதேவராயர் கோபம்கொண்டு மாளிகையை இடிக்க உத்தரவிட்டார்.
அரசரின் கட்டளை கேள்விப்பட்டு ஆயி ஓடி வந்து அரசரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரினாள். அரசரிடம் அவகாசம் பெற்று அம்மாளிகை இருந்த இடத்தில் மக்களுக்குப் பயன்படும் வகையில் பொது குளம் வெட்டினார். இதுவே முத்தரையர்பாளையம் ஆயி குளம் பிறந்த கதை.
புதுச்சேரியில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க கவர்னர் போன்டெம்ப்ஸ் வேண்டுகோளின்பேரில், பிரெஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியன் அனுப்பி வைத்த பொறியாளர் லாமைரெஸ்சே, இந்த ஆயி குளத்திலிருந்து இன்று பாரதி பூங்கா உள்ள இடம்வரை கால்வாய் வெட்டினார்.
இது புதுச்சேரியின் குடிநீர்த் தட்டுப்பாட்டுப் பிரச்னையைத் தீர்த்தது. தனது மாளிகையை இடித்து குளம்வெட்டி மக்கள் தொண்டாற்றிய தாசியின் கதையை அறிந்த மூன்றாம் நெப்போலியன் பணித்ததின் பேரில் ஆயியைச் சிறப்பிக்கும்பொருட்டு இம்மண்டபம் ஏற்படுத்தப்பட்டது. இது கட்டப்பட்ட காலம் 1852 - 1870 ஆகும்.
பதினாறு கிரேக்க டோரிக் கலை துாண்களை நான்கு பக்கங்களிலும் கொண்டுள்ளது. துாண்களின் மேல் இதழ்கள் மற்றும் மலர்ந்த மலர்கள் அமைப்பை உடைய அரைவட்ட கவிகை மண்டபமும் அழகு சேர்க்கின்றன.
இந்த கவிகை மண்டபத்தின் நான்கு பக்கங்களிலும் கிரேக்க முக்கோண முகடுகளையம் கொண்டு ஆயி மண்டபம் கொள்ளை அழகாக உள்ளது. கிழக்கு முக்கோண அமைப்பில் இறக்கைகள் உள்ள இரண்டு குதிரைகள் மற்றும் நங்கூரம், மேற்கில் யாழ் மற்றும் குடத்துடன் ஒருக்களித்து படுத்த நிலையில், அரை நிர்வாண பெண்ணும், வடக்கில் நெப்போலிய சின்னமான இறக்கை விரித்த பருந்தும், தெற்கில் போர் வீரர்கள் பிடித்துள்ள இலட்சினை தட்டும் உள்ளன.
ரோம் ஏதென்ஸ் அகோராவிற்கு அருகில் கி.மு.. 450-440 இடையில் எழுப்பப்பட்ட டோரிக் கோவிலை போன்று ஆயி மண்டபம் எழுப்பப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.