/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியை காத்த ஆலங்குப்பம் சுண்ணாம்பு ஆங்கிலேயர்களையும் மலைக்க வைத்த வரலாறு அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே....
/
புதுச்சேரியை காத்த ஆலங்குப்பம் சுண்ணாம்பு ஆங்கிலேயர்களையும் மலைக்க வைத்த வரலாறு அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே....
புதுச்சேரியை காத்த ஆலங்குப்பம் சுண்ணாம்பு ஆங்கிலேயர்களையும் மலைக்க வைத்த வரலாறு அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே....
புதுச்சேரியை காத்த ஆலங்குப்பம் சுண்ணாம்பு ஆங்கிலேயர்களையும் மலைக்க வைத்த வரலாறு அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே....
ADDED : மே 17, 2025 11:27 PM
புதுச்சேரி பிரெஞ்சியர்கள் ஆட்சியின் கீழ் இருந்தாலும் தமிழக பகுதிகளையும் படையெடுத்து கைப்பற்ற அவ்வப்போது ஆங்கிலேயர்கள் மீது போர் தொடுத்து வந்தனர். ஆனால், இந்தியா முழுதும் வலிமையாக இருந்த ஆங்கிலேயர்கள், பிரெஞ்சியர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து புதுச்சேரி நகரை அடிக்கடி கைப்பற்றுவதும், அதன் பிறகு பாரீசில் ஒப்பந்தம் ஏற்பட்டு திரும்பி கொடுப்பதும் வாடிக்கையாக நடந்தது.
இப்படித் தான் 1761ல் பிரெஞ்சியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் பெரிய போர் மூண்டது. இந்த போரில் பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர்களிடம் தோற்றனர். அப்போது ஆங்கிலேயேர்களின் தளபதி ஜெனரல் கோட் புதுச்சேரியில் இருந்த கோட்டை, கொத்தளம், மாளிகைகள் அனைத்தையும் இடித்து அழித்து தரைமட்டமாக உத்தரவிட்டார்.
அதன்படி புதுச்சேரியில் உள்ள கட்டடங்களை தரைமட்டமாக்கும் வேலையில் படை வீரர்கள் இறங்கினர். ஆனால், படை வீரர்கள் மலைத்து போகும் அளவிற்கு புதுச்சேரியில் பல கட்டடங்கள் வலுவாக இருந்ததால், அழிவில் இருந்து தப்பித்து கொண்டன. இதன் காரணம் என்ன தெரியுமா?
அவை நல்ல சுண்ணாம்பினால் வலிமையாக கட்டப்பட்டு இருந்ததால் இடிக்க முடியவில்லை. அதனால் தான், சுண்ணாம்பினால் கட்டடப்பட்ட கட்டடங்களை ஒன்றும் செய்ய முடியாமல் அப்படியேவிட்டுச் சென்றனர்.
இதனை வரலாற்று பேராசிரியர் ழுவோ துய் பிரேய் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். அக்காலத்தில் கோட்டைகள் கட்டும் அளவிற்கு புதுச்சேரியில் சுண்ணாம்பு அதிகம் தேவைப்பட்டுள்ளது. வீடுகள் கட்டவும் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அப்படியென்றால் இவ்வளவு சுண்ணாம்பு எங்கிருந்து புதுச்சேரிக்கு வந்திருக்கும் என பலருக்கும் கேள்வி எழுந்திருக்கும். இதற்கு விடை ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பில் ஒளிந்து இருக்கிறது.
புதுச்சேரியில் இருந்து கோரிமேடு வழியாக சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள திருசிற்றம்பலத்திற்கு வடக்கில் உள்ள ஆலங்குப்பத்தில் இருந்து சுண்ணாம்பு வெட்டி எடுத்து புதுச்சேரியில் கோட்டை, கொத்தளங்கள் கட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அளவிற்கு ஆலங்குப்பம் சுண்ணாம்பு அக்காலத்தில் கட்டுமானத்திற்கு புகழ் பெற்றிருந்தது.
சுண்ணாம்பிற்காக வெகுண்டு எழுந்த பிரெஞ்சியர்கள்:
1742ல் புதுச்சேரியை அடுத்துள்ள பிரதேசத்தை ஆண்ட நவாபின் பிரநிதியான மீர் அசாத்தின் ஆட்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் மொரட்டாண்டியில் மரம் அறுத்தது தொடர்பாக பிரச்னை வெடித்தது. பழி வாங்கும் நடவடிக்கையில் மீர் அசாத்தின் ஆட்கள் இறங்கினர்.
புதுச்சேரிக்கு வந்த வெற்றிலை கட்டுகளை வழுதாவூரில் இறக்கி போட்டனர். காஞ்சீபுரம், திருவொற்றியூர் உள்ளிட்ட ஊர்களின் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்ட சிப்பந்திகள் புதுச்சேரிக்கு வந்த துணி கட்டுகளையும் தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும் பிரெஞ்சியர்கள் பொறுமையாகவே இருந்தனர். ஆனால் அடுத்து மீர் அசாத்தின் ஆட்கள், ஆலங்குப்பத்தில் இருந்து வந்த சுண்ணாம்பு மூட்டைகளை தடுத்து நிறுத்தினர். அதுவரை பொறுமையாக இருந்த பிரெஞ்சிக்காரர்களை ரொம்ப சோதித்துவிட்டது.
அந்த நேரத்தில் டூப்ளே புதுச்சேரி கடற்கரை பகுதியில் இருந்த கோட்டை கொத்தளங்களை நேரடி மேற்பார்வையில் புதுப்பித்துக்கொண்டு இருந்தார். கோட்டை, கொத்தளத்திற்கு ஆலங்குப்பம் சுண்ணாம்பு அவசியம் என்பதால் கோபத்தில் கொந்தளித்தார்.
உடனடியாக படை வீரர்களை அழைத்த டூப்ளே, மீர் ஆசாத்தின் கொடிகளை அறுத்துவிட்டு, ஆலங்குப்பம் சுண்ணாம்பினை எடுத்துவர செய்தார். அதன்படியே ஆலங்குப்பம் சுண்ணாம்பு புதுச்சேரிக்கு வந்து சேர்ந்து கோட்டை, கொத்தளங்களை வலுவாக்கியது.
மரக்காணத்தில் கிளிஞ்சல் சுண்ணாம்பு கிடைத்தாலும், அது பருவ நிலையை சார்ந்தே கிடைத்தது. குறிப்பாக மழைக்காலங்களில் புதுச்சேரி கோட்டை, கொத்தளங்களை கட்ட கிடைக்கவில்லை. அதையடுத்தே எப்போதும் சுண்ணாம்பு கிடைக்கும் ஆலங்குப்பத்தை பிரெஞ்சியர்கள் தேர்வு செய்து, மூட்டை மூட்டையாக சுண்ணாம்பு கொண்டு புதுச்சேரியில் கோட்டையை கட்டி எழுப்பி போர்களில் இருந்து காத்தனர்.