கோடையில் பூத்து குலுங்கும் வேப்பம் பூ: மருத்துவ குணங்கள் ஏராளம்
கோடையில் பூத்து குலுங்கும் வேப்பம் பூ: மருத்துவ குணங்கள் ஏராளம்
ADDED : ஏப் 21, 2026 06:44 PM

பாகூர்: கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்பம் பூ பூத்து குலுங்கி வருகிறது. உதிரும் பூக்களை சேமித்து வைத்து, உடல் ஆரோக்கியத்திற்குப் பயன்படுத்தலாம்.
இந்தியாவில் அதிகமாக காணப்படும் மரங்களில் மிக முக்கியமான மரம் வேப்ப மரமாகும். இதன், பூர்வீகம் இந்தியா, இலங்கை, பர்மா, பாகிஸ்தான் ஆகும். கோடைக் காலத்தில் வேப்ப மரங்கள் நிழல் தரும் குடைகளாக உள்ளது. அதனடியில், அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதி கிடைக்கும். நிழல் மட்டுமல்ல, கோடைக்கால ஒவ்வாமைகள், உடல் நலப் பிரச்னைகளையும் காக்கும் மருத்துவராகவும் வேப்ப மரம் பயன்படுகிறது. இதன் இலை, பூ, காய், பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது.
வேப்ப மரம் மனிதர்களுக்குக் கிடைத்த ஒரு அற்புத பொக்கிஷம். இருப்பினும் இதன் மருத்துவ ரீதியான மகத்துவத்தை மக்கள் முழுமையாக உணரவில்லை. கோடை காலமான, ஏப்ரல், மே மாதங்களில் வேப்ப மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும்.
இந்த பூக்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவற்றை வைத்து பல வகையான பிரச்னைகளுக்கு, வைத்தியம் பார்க்கலாம். மரத்தடியில் துணி அல்லது பாயை விரித்து, உதிரும் பூக்களைச் சேகரித்து, காம்புகளை நீக்கி, நிழலில் நன்கு காய வைத்து, ஈரப்பதம் இல்லாமல் சேமித்து,'ஓராண்டுவரை பயன்படுத்தலாம். ரசம், துவையல், வத்தல், வடிகம், பச்சடி போன்றவை செய்யலாம். செரிமானத்திற்கு நல்லது மற்றும் குடல் புழுக்களை நீக்க உதவும். மேலும், சருமப் பராமரிப்பு கிருமி நாசினியாகச் செயல்படுகிறது.
தற்போது, கோடைக்காலம் என்பதால், புதுச்சேரியில் வேப்பம் பூ சீசன் துவங்கி உள்ளது. குறிப்பாக, பாகூர், வில்லியனுார், திருக்கனுார், நெட்டப்பாக்கம், திருபுவனை உள்ளிட்ட கிராமங்களில் சாலையோரங்களில் உள்ள வேப்ப மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கி வருகிறது.
ஆண்டிற்கு ஒரு முறை கோடையில் மட்டுமே கிடைக்கும் பொக்கிஷமான வேப்பம் பூவைச் சேமித்து வைத்து, உடல் ஆரோக்கியத்திற்குப் பயன்படுத்தலாம்.
இது குறித்து முதலியார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சடகோபன் கூறுகையில்'' வேம்பு இந்தியாவுக்கே உரியதாக நெடுங்காலமாக பயனளித்து வருகிறது. இதன் இலை, பூ, பழம், கொட்டை, எண்ணெய், மரப்பட்டை முதலான அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் உள்ளவை. குறிப்பாக, இம்மரத்தில் இருந்து உதிரும் பூக்களை எடுத்து உலர வைத்து சுத்தம் செய்து பயன்படுத்துவதன் மூலமாக, பித்த மயக்கம், நாவறட்சி, சுவையின்மை, ஏப்பம், வயிற்றுப் புழுக்களை போக்கும். பூவை நெய் விட்டு வதக்கி புளி, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்யலாம்.பூக்களை நீரில் ஊறவைத்து குடிநீராக அருந்தலாம். பூக்களை, உலர்த்தி பொடி செய்து மிளகுரசம் அல்லது மிளகு சேர்த்து செய்த புளிக் குழம்பில் கலந்து உண்டால், மேற்சொன்ன நோய்கள் அகலும். என்றார்.''
