/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சருக்கு கிடைக்காதது அதிகாரிக்கு கிடைத்தது
/
அமைச்சருக்கு கிடைக்காதது அதிகாரிக்கு கிடைத்தது
ADDED : நவ 02, 2025 04:16 AM

புதுச்சேரி: ஏனாமில் நடந்த விடுதலை நாள் விழாவில் தேசிய கொடியை நிர்வாக அதிகாரி ஏற்றினார்.
அரசியல்வாதிகள் ஆயிரம் விழாக்களில் பங்கேற்றாலும், தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பை பெருமையாக கருதுவார்கள். அதன்படி, புதுச்சேரியில் சுதந்திர தினம் மற்றும் புதுச்சேரி விடுதலை நாள் விழாக்களில் முதல்வரும், காரைக்கால், ஏனாம் மற்றும் மாகியில் அமைச்சர்களும் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம்.
அதன்படி நேற்று நடந்த விடுதலை நாள் விழாவில், புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றினார். மாகியில் அமைச்சர் தேனீ ஜெயக்குமாரும், காரைக்காலில் அமைச்சர் திருமுருகனும் தேசிய கொடியை ஏற்றினர்.
ஆனால், ஏனாமில் மக்கள் பிரதிநிதிகளுக்கு பதிலாக, பிராந்திய நிர்வாக அதிகாரியான அங்கித்குமார் நேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதுகுறித்து விசாரித்தபோது, விடுதலை நாள் விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தேசிய கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் லட்சுமிநாராயணனின் தாயார் கடந்த 29ம் தேதி இறந்ததால், அவரால் விடுதலை நாள் விழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
உடன் மாற்று ஏற்பாடாக அமைச்சர் ஜான் குமாரை ஏனாமில் தேசிய கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அதுகுறித்த தகவலை நேற்று முன்தினம் 31ம் தேதி காலை அதிகாரிகள் தெரிவிக்க முயன்றபோதுதான், அவர் முதல் நாளான 30ம் தேதி சிங்கப்பூர் சென்றிருப்பதும், 1ம் தேதி இந்தியா திரும்புவது தெரியவந்தது.
அதனால், மாற்று ஏற்பாடு செய்ய முடியாததால், ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரியான அங்கித்குமாருக்கு தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பு கிடைத்தது.

