/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மேய்ச்சலுக்கு சென்ற பசுக்கள் இறப்பு போலீசார் தீவிர விசாரணை
/
மேய்ச்சலுக்கு சென்ற பசுக்கள் இறப்பு போலீசார் தீவிர விசாரணை
மேய்ச்சலுக்கு சென்ற பசுக்கள் இறப்பு போலீசார் தீவிர விசாரணை
மேய்ச்சலுக்கு சென்ற பசுக்கள் இறப்பு போலீசார் தீவிர விசாரணை
ADDED : ஜன 17, 2024 08:40 AM

பாகூர்: மேய்சலுக்கு சென்ற இரண்டு பசுமாடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம், கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் பேப்பர் மில் சாலையைச் சேர்ந்தவர் விஜயா,57;பசு மாடுகள் வளர்த்து வரும் இவர், அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு ஜீவனம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் மேய்ச்சலுக்கு சென்ற ஒரு கறவை பசுவும், ஒரு சினை பசுவும்மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த விஜயா மற்றும் அவரது குடும்பத்தினர் இரு பசுக்களையும் பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்நிலையில் நேற்று காலை பிள்ளையார்குப்பம் வெள்ளக்குளம் அருகே வயலில் தேங்கி இருந்த நீரில் ஒரு பசுவும், கரைப்பகுதியில் ஒரு பசுவும் இறந்து கிடந்தது. கரைப்பகுதியில் இறந்து கிடந்த பசுவின் கண், வாய், மூக்கில் இருந்து ரத்தம் வடிந்திருந்தது.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஜயா, தனது பசுமாடுகளை யாரோ விஷம் வைத்து கொன்று இருப்பதாக கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் உதவி சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன், ஏட்டு மாரிமுத்துமற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த பசுக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், பாகூர் கால்நடை மருத்துவர் துளசிராமன் தலைமையிலான குழுவினர், இறந்த இரு பசுக்களையும் பிரேத பரிசோதனை செய்தனர். அதில், இரு பசுக்களின் வயிற்றில் ஜீரணிக்க முடியாமல் சுமார் 5 முதல் 8 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி இருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது.மேலும் ரத்தம், நுரையீரல், உள்ளிட்ட உறுப்புகளின் மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
விஜயா வளர்த்து வந்த இரண்டு கறவை பசுக்கள், ஆடுகள் ஏற்கனவே மர்மமான முறையில் இறந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டு பசுமாடுகள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

