/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூச்சிக்கொல்லி மருந்துகளின் தரம்... கேள்விக்குறி; ஆண்டாக ஆய்வகம் பூட்டி கிடக்கும் அவலம்
/
பூச்சிக்கொல்லி மருந்துகளின் தரம்... கேள்விக்குறி; ஆண்டாக ஆய்வகம் பூட்டி கிடக்கும் அவலம்
பூச்சிக்கொல்லி மருந்துகளின் தரம்... கேள்விக்குறி; ஆண்டாக ஆய்வகம் பூட்டி கிடக்கும் அவலம்
பூச்சிக்கொல்லி மருந்துகளின் தரம்... கேள்விக்குறி; ஆண்டாக ஆய்வகம் பூட்டி கிடக்கும் அவலம்
ADDED : ஏப் 16, 2025 04:21 AM

புதுச்சேரி: வேளாண் துறையின் ஆய்வகம் கடந்த 2 ஆண்டாக பூட்டிக் கிடப்பதால், பூச்சிக் கொல்லி மருந்துகளின் தரம் கேள்விக்குறியாகி உள்ளதால், விவசாயிகள் பெரும் தவிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதனையொட்டி மத்திய, மாநில அரசுகள் வேளாண் துறையில் பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், விவசாயிகள் தரமான விதைகளை பயிரிடவும், பயிர்களின் வளர் பருவத்தில் பயன்படுத்த வேண்டிய உரம் மற்றும் நோய் தாக்கினால், அதிலிருந்து பாதுகாக்க வேண்டிய பூச்சி கொல்லி மருந்துகளையும் விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் பரிந்துரை செய்யப்படுகிறது.
இவ்வாறு விவசாயிகள் பயன்படுத்தும் விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக, தனியார் நிறுவனங்களில் உற்பத்தி செய்து விற்கப்படும் விதை, உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளைஆய்வு செய்வதற்காக வேளாண் துறையில் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்கள் பகுதியில் ஒவ்வொரு பருவத்திற்கும் விற்பனைக்கு வரும் விதை, உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்தை கொண்டு தயாரிக்கப்படும் கொசுவத்தியை விலைக்கு வாங்கி, அதனை வேளாண் துறை ஆய்வகத்தில் ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை வெளியிட வேண்டும்.
அதில் சம்மந்தப்பட்ட விதை, உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் கொசுவத்தி தரமில்லை எனில், அந்த மருந்து விற்பனையை உடன் தடை செய்ய வேண்டும். மேலும், சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக புதுச்சேரி வேளாண் துறையில் புதுச்சேரியில் 20, காரைக்கால் 6 , ஏனாம், மாகியில் தலா ஒருவர் என மொத்தம் 28 வேளாண் அலுவலர்கள், விதை, உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்கள் பகுதிகளில் சேகரிக்கும் விதைகளை, புதுச்சேரி வேளாண் தலைமையகத்தில் உள்ள ஆய்வகத்திற்கும், உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பர்.
இந்த ஆய்வகங்களில், ஐ தராபாத்தில் உள்ள மத்திய அரசின் வேளாண் ஆய்வகத்தில் இரண்டு மாதம் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள், வேளாண் ஆய்வாளர்கள் சேகரித்து அனுப்பம் மாதிரிகளை ஆய்வு செய்து, அதன் முடிவுகளை அறிவிப்பர்.
பூச்சிக்கொல்லி ஆய்வகத்தில் பணி புரிவதற்கான பயிற்சி பெற்ற இரு வேளாண் அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் ஒருவர் வனத்துறையிலும், மற்றொருவர் பாகூரில் வேளாண் அலவலர்களாக பணி புரிகின்றனர். ஆய்வகத்திற்கு பயிற்சி பெற்ற அலுவலர் இல்லாத காரணத்தினால், கடந்த 2 ஆண்டுகளாக பூச்சி மருந்து ஆய்வகம் மூடிக்கிடக்கிறது.
புதுச்சேரியில், சொர்ணவாரி, சம்பா மற்றும் நவரை ஆகிய மூன்று பட்டங்களிலும் பயிரிடப்படுகிறது. இதனால், ஆண்டிற்கு 200க்கும் மேற்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்படும். ஆனால், கடந்த 2 ஆண்டாக ஆய்வகம் பூட்டிக் கிடப்பதால், 400க்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லி மாதிரிகள் ஆய்வு செய்யாமல் உள்ளது.
பூச்சிக் கொல்லிக் மருந்து விதிகளின் மாதிரி சேகரித்த ஒரு மாதத்திற்குள் ஆய்வு செய்து முடிவை அறிவிக்க வேண்டும். ஆனால், 2 ஆண்டிற்கு மேலாக பூச்சிக் கொல்லி மருந்துகளின் தரத்தை அறியாமலே, விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நோயின் தாக்கம் குறையாத நிலையில் பூச்சிக்கொல்லி மருந்தின் விற்பனை அதிகமாகி வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தவிர்க்கவும், தேவைக்கு ஏற்ப பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்த வசதியாக இளம் வேளாண் அலுவலர்களை நியமித்து, பூச்சிக் கொல்லி ஆய்வகத்தை திறக்க வேளாண் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

