/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி உதயம்
/
புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி உதயம்
ADDED : டிச 15, 2025 06:04 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி உதயமானது. கட்சியின் கொடியை ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிமுகப்படுத்தி வைத்தார்.
புதுச்சேரியில் மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு ஜே.சி.எம்., மக்கள் மன்றம் மூலம் தீர்வு கண்ட ஜோஸ் சார்லஸ் மார்டின், ஆளும் என்.ஆர்.காங்., அரசு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் லட்சிய ஜனநாயக கட்சி துவக்க விழா மற்றும் கட்சி கொடி அறிமுக விழா பாண்டி மெரினாவில் நேற்று நடந்தது.
முன்னதாக அவர், மணக்குள விநாயகர் கோவில் , துாய ஜென்மராக்கினி அன்னை பேராலயம், ஹம்ரத் சையத் அஹமத் மவுலா சாஹிப் வலியுல்லாஹ் தர்கா வழிபட்டார்.பின் புதுச்சேரி துறைமுகத்திலிருந்து படகு மூலம் கடலுக்குள் சென்று லட்சிய ஜனநாயக கட்சியின் கொடியை ஏற்றி அறிமுகம் செய்து வைத்தார். நீலம், வெள்ளை, சிவப்பு நிறக் கொடியில் கையில் வேலேந்திய சிங்கம், 6 நட்சத்திரங்கள் மற்றும் நெற்கதிருடன் எல்.ஜே.கே., என பொறிக்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சி கொடியை ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து 64 படகுகள் எல்.ஜே.கே., வடிவத்தில் பிரம்மாண்டமாக அணிவகுத்து நின்றன.
ஜே.சி.எம்., மக்கள் மன்ற தவைர் ரீகன் ஜான்குமார் உறுதிமொழி வாசிக்க, புதுச்சேரியில் ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்போம் என உறுதிமொழி ஏற்றனர். புதுகட்சி துவங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மத நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் வகையில் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களிடம் ஒரு சேர ஆசி பெற்றார்.
நிகழ்ச்சியில் ஜோஸ் சர்லஸ் மார்டின் குடும்பத்தினர், எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவசங்கர், மங்கலம் தொகுதி ஜே.சி.எம்., நிர்வாகி கண்ணபிரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் லட்சிய ஜனநாயக கட்சியில் அணி அணியாக வந்து இணைத்து கொண்டனர்.

