/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநிலத்திற்கு தனி போக்குவரத்து கொள்கை தேவை! வாகனங்கள் அதிகரிப்பால் திணறும் சாலைகள்
/
மாநிலத்திற்கு தனி போக்குவரத்து கொள்கை தேவை! வாகனங்கள் அதிகரிப்பால் திணறும் சாலைகள்
மாநிலத்திற்கு தனி போக்குவரத்து கொள்கை தேவை! வாகனங்கள் அதிகரிப்பால் திணறும் சாலைகள்
மாநிலத்திற்கு தனி போக்குவரத்து கொள்கை தேவை! வாகனங்கள் அதிகரிப்பால் திணறும் சாலைகள்
ADDED : ஜூலை 01, 2024 06:55 AM

புதுச்சேரி : புதுச்சேரியின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள சூழ்நிலையில், தனி போக்குவரத்து கொள்கை உருவாக்கினால் மட்டுமே தீர்வு காண முடியும்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலத்தில் 12 லட்சத்திற்கு மேல் வாகனங்கள் ஓடுகின்றன. அதே சமயத்தில், அதிகரித்துள்ள வாகனங்களின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல் அனைத்து சாலைகள், சிக்னல்கள் திணறி வருகின்றன.
ஆனால், 'பீக் ஹவர்' நேரங்களில் மட்டும் போக்குவரத்து போலீசார் கவனம் செலுத்தினாலும், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு இன்றுவரை நிரந்தர தீர்வு காணப்படாமல் உள்ளது. வீட்டில் இருந்து புறப்பட்டு ஒரு இடத்திற்கு செல்வதற்குள் பொதுமக்களுக்கு பெரும்பாடாக உள்ளது.
நகரின் முக்கிய இடமான ராஜிவ், இந்திரா, காந்தி சிலை சதுக்கம் பகுதியில் ஐந்து முக்கியச் சாலைகள் சந்திக்கின்றன. நாள்தோறும் லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இப்பகுதியை நத்தை வேகத்தில் கடக்கின்றன. காலை, மாலை நேரங்களில் இப்பகுதியை கடக்க நெடுநேரம் எடுக்கிறது. இங்குள்ள சிக்னலில் போக்குவரத்து போலீசார் அதிகளவில் பணியில் இருந்தாலும் இந்த நெருக்கடியை சமாளிக்க திணறுகின்றனர்.
மற்ற மாநிலங்களை போன்று புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க தனி போக்குவரத்து கொள்கை இதுவரை உருவாக்கப்படவில்லை. இது போக்குவரத்து நெரிசல் உச்சக்கட்டமாக இருப்பது முக்கிய காரணமாக உள்ளது.
என்ன வித்தியாசம்
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வழிமுறைக்கும், போக்குவரத்து நெரிசலை தனி கொள்கை உருவாக்கி கட்டுப்படுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தற்போது மேலோட்டமாக போக்குவரத்து நெரிசல் சமாளிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கான அடிப்படை காரணத்தை முழுமையாக ஆய்வு செய்யவில்லை. மேம்போக்காக திடீரென காவலர்களை போட்டு வி.ஐ.பி.,கள் வரும்போது அந்த வழிகளில் மட்டும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது, மற்ற நேரங்களில் அங்கிருந்து காணாமல் போய்விடுவதும் வாடிக்கையாக நடக்கிறது.
இதன் காரணமாகவே அதிகாரிகள் யாராக இருந்தாலும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வழி தெரியாமல் புதுச்சேரி சாலைகள் திணறி வருகின்றன. இதுவே போக்குவரத்து நெரிசலை சமாளிக்க தனிக்கொள்கை உருவாக்கும்போது இப்படியெல்லாம் செய்ய முடியாது.
உதாரணமாக தற்போது, ஒவ்வொரு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எந்த தொலைநோக்கு திட்டம், நிதி பங்களிப்பு ஏதும் கிடையாது. போக்குவரத்து போலீஸ் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரியை விருப்பம், ஆர்வத்தை பொறுத்தது.
உயரதிகாரிக்கு நெரிசலை சமாளிக்க ஆர்வம் இல்லையென்றால், ஒன்றும் செய்ய முடியாது. கடை நிலை போக்குவரத்து காவலர்கள் வரை ஆர்வம் இல்லாமல் இருப்பர்.
அதுவே ஒவ்வொரு இடத்திலும் போக்குவரத்தை நெரிசலுக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கான தீர்வை முன்னிறுத்தி, போக்குவரத்து நெரிசலை தடுக்க தனி கொள்கை உருவாக்கி, டார்கெட் கொடுக்கும், எந்த அதிகாரியாக இருந்தாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தப்பட்டுள்ள வகுக்கப்பட்டுள்ள கொள்கையை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும்.
களத்தில் இறங்கி முடித்தே தீர வேண்டும். உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தினசரி கட்டாயமாக களத்தில் இருக்க வேண்டும்.
தற்போது உள்ளதுபோல், திடீரென காணாமல்போய்விட முடியாது. டூட்டி சார்ட் இருக்கும்.
ஆனால் 'டிராபிக் பாலிசி' எனப்படும் தனி கொள்கை உருவாக்க போக்குவரத்து போலீசார் ஆர்வம் இல்லாமல் மவுனமாக உள்ளனர்.
தமிழகத்தின் சிறிய மாவட்டங்களில் கூட டிராபிக் பாலிசி உருவாக்கி வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரியிலும் போக்குவரத்து நெரிசலைக்கென தனி கொள்கை உருவாக்க கவர்னர், முதல்வர், டி.ஜி.பி., உத்தரவிட்டால் மட்டுமே நகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.