/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
10 ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி பொதுமக்கள் ஓட்டலை முற்றுகையிட்டதால் பரபரப்பு
/
10 ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி பொதுமக்கள் ஓட்டலை முற்றுகையிட்டதால் பரபரப்பு
10 ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி பொதுமக்கள் ஓட்டலை முற்றுகையிட்டதால் பரபரப்பு
10 ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி பொதுமக்கள் ஓட்டலை முற்றுகையிட்டதால் பரபரப்பு
ADDED : ஜன 18, 2024 03:53 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் 10 ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி என அறிவித்த நிலையில், 200 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டு ஓட்டல் மூடப்பட்டது. வெகுநேரம் காத்திருந்து கிடைக்காதவர்கள் ஓட்டலை முற்றுகையிட்டு, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பா.ஜ., பிரமுகர் ஒருவர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் எதிரில்,லெபர்தனே வீதியில் புதிய ஓட்டல் திறந்துள்ளார்.
அந்த ஓட்டலுக்கு பைசா செலவு இன்றி விளம்பரம் செய்ய விரும்பினார்.இதற்காக, நேற்றுமதியம் 12:00 மணிக்கு, 10 ரூபாய் நாணயம் கொடுத்தால், முட்டையுடன் ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என, அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக புதுச்சேரி முழுதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டது.
இதை அறிந்த நுாற்றுக்கணக்கான மக்கள் பிரியாணி வாங்க கையில் 10 ரூபாய் நாணயத்துடன் வரிசையில் காத்திருந்தனர். லெபர்தனே வீதி, புஸ்சி வீசி, ஆம்பூர் சாலை வரை 500 மீட்டர் துாரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சரியாக 12:00 மணிக்கு பிரியாணி கொடுக்க ஆரம்பித்தனர். சரியான ஏற்பாடுகள் இல்லாததால், புஸ்சி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர். 15நிமிடத்தில் பிரியாணி பார்சல்தீர்ந்தது. மொத்தம் 200 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டது.
வரிசையில் காத்திருந்த நுாற்றுக்கணக்கான மக்கள் ஓட்டலை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் ஓட்டல் ஷட்டர்களை மூடி விட்டு உள்ளே சென்று விட்டனர்.ஒதியஞ்சாலை போலீசார் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி நிலைமை சரி செய்தனர்.
முதலில் வரும் 200 பேருக்கு மட்டுமே பிரியாணி என அறிவித்து இருந்தால், வந்திருக்க மாட்டோம். நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்து ஏமாற்றி விட்டனர் என, பிரியாணி கிடைக்காத மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.