/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோக்சபா தேர்தலில் காங்., - பா.ஜ.,நேரடி மோதல்... இதுவே முதல்முறை
/
லோக்சபா தேர்தலில் காங்., - பா.ஜ.,நேரடி மோதல்... இதுவே முதல்முறை
லோக்சபா தேர்தலில் காங்., - பா.ஜ.,நேரடி மோதல்... இதுவே முதல்முறை
லோக்சபா தேர்தலில் காங்., - பா.ஜ.,நேரடி மோதல்... இதுவே முதல்முறை
ADDED : ஏப் 01, 2024 06:32 AM
புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தேர்தலில் காங்., - பா.ஜ., இடையே முதல் முறையாக நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி பார்லிமெண்ட் தொகுதியில் காங்., கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் கடந்த 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி., யாக உள்ளார்.
ஒருவழியாக கூட்டணி கட்சியான தி.மு.க.வுடன் முட்டி மோதிய காங்., கட்சி, மீண்டும் சிட்டிங் சீட்டினை கேட்டு பெற்று, வைத்திலிங்கத்தை மீண்டும் லோக்சபா தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
மறுபக்கம் புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் இந்தமுறை பா.ஜ., சீட்டினை பெற்று போட்டியிடுகின்றது. அக்கட்சியின் வேட்பாளராக மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிறுத்தப்பட்டுள்ளார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதியை பொருத்தவரை காங்., கோட்டையாக உள்ளது. புதுச்சேரி லோக்சபா தொகுதியில் இதுவரை 15 லோக்சபா தேர்தலும்,1 இடைத்தேர்தலும் நடந்துள்ளது.
இவற்றில் 11 முறை காங்., கட்சியே வெற்றிப் பெற்று அசுர பலத்துடன் உள்ளது. அதேவேளையில் பா.ஜ., 1991, 1996, 2004, 2009 என நான்குமுறை லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு நான்கு தேர்தல்களிலும் தோல்வியை தழுவியுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் பா.ம.க., - பா.ஜ., இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதில் பா.ம.க., வேட்பாளர் ராமதாஸ் வெற்றிப்பெற்றார். பா.ஜ., வேட்பாளர் லலிதா 1,72,4712 ஓட்டுகளுடன் இரண்டாம் இடம் பெற்றார். அந்த தேர்தலில் பா.ஜ.,விற்கு 35.65 சதவீத ஒட்டு கிடைத்தது. ஆனால் மற்ற லோக்சபா தேர்தல்களில் சொல்லிக்கொள்ளும்படி ஓட்டு சதவீதம், போட்டியும் இல்லை.
1991ம் ஆண்டு தேர்தலில் 1.97 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாம் இடம், 1996ல்-4.42 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாம் இடம், 2009ல்-2.21 சதவீத ஒட்டுகளுடன் மூன்றாம் இடம் பிடித்தது.
இந்த நான்கு தேர்தலில் பா.ஜ., போட்டியிட்டாலும் காங்., கட்சிக்கும் பா.ஜ.,விற்கு இடையே நேரடி போட்டி இல்லை.
தி.மு.க., பா.ம.க., என்.ஆர்.காங்., உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கும் இடையே தான் காங்., கட்சிக்கு நேரடி போட்டி இருந்தது.
இந்த முறை புதுச்சேரியில் முதல் முறையாக காங்., - பா.ஜ., இடையே தான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆளும் கட்சியாக, என்.ஆர்.காங்., கூட்டணி எம்.எல்.ஏக்கள் அசுர பலத்துடன் தேர்தலில் பா.ஜ., களம் இறங்கி, வெற்றிக் கான வியூகங்களை வகுத்து வருகின்றது.
12-வது முறையாக வெற்றிப் பெற்று சிட்டிங் சீட்டினை தக்க வைக்க தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், வி.சிறுத்தைகள் என பெரிய கூட்டணியுடன் காங் கட்சியும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளதால் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கின்றது.

