/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
/
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
UPDATED : ஆக 22, 2025 12:49 PM
ADDED : ஆக 22, 2025 09:10 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 21) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
ஆசிரியர் கைது
கூடலுார் அருகே உள்ள, பழங்குடி அரசு பள்ளியில், பழங்குடி மாணவிகள் சிலருக்கு, அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில், 'சைல்ட் லைன்' சார்பில் விசாரணை மேற்கொண்டு, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் சித்ரா, ஆசிரியர் மாரியப்பன், 52, மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டார். வழக்கில் தொடர்புடைய ஆசிரியர் தலைமறைவானார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று, அவரை ஊட்டியில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
குன்னுார் அருகே கிராமத்தை சேர்ந்த, 13 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ராஜா,25, என்பவர் மிரட்டி பல முறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் ராஜாவின் தொந்தரவு தாங்க முடியாத சிறுமி, தனது அக்காவிடம் நடந்த சம்பவத்தை கூறி 'சைல்டு லைனுக்கு' தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.
'சைல்டு லைன்' உதவியுடன், குன்னுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ், 2021ம் ஆண்டு ஜன., 30ம் தேதி ராஜனை கைது செய்தனர். இவ்வழக்கு, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ராஜா மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், 20 ஆண்டுகள் சிறை தண்டனை; 15,500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார்.
'பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு, 3 லட்சம் ரூபாய் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.
தந்தைக்கு ஐந்தாண்டு சிறை
தாம்பரம் காவல் மாவட்டத்தை சேர்ந்த 16, 14 வயதுடைய சிறுமியர், பெற்றோருடன் வசித்து வருகின்றனர். கடந்த 2022ல், தாய் வீட்டில் இல்லாதபோது, சிறுமியரின் தந்தை, சிறுமியரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியர் அளித்த புகாரை அடுத்து, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியரின் தந்தையை கைது செய்து, சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றுவந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார்.
வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், டில்லிபாபுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதம் விதித்தும், கட்டத்தவறினால், மேலும் ஆறு மாதம் சிறைதண்டனையும் விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியருக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய், தமிழக அரசு வழங்க உத்தரவிட்டார்.