/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் குழந்தை கடத்திய பெண் உட்பட மூவர் கைது
/
புதுச்சேரியில் குழந்தை கடத்திய பெண் உட்பட மூவர் கைது
புதுச்சேரியில் குழந்தை கடத்திய பெண் உட்பட மூவர் கைது
புதுச்சேரியில் குழந்தை கடத்திய பெண் உட்பட மூவர் கைது
ADDED : பிப் 17, 2024 06:25 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் குழந்தை கடத்திய பெண் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கும்பல் 2வது முறையாக குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை, நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் முத்துபாண்டி,26; இவர் கடந்த 14ம் தேதி கடற்கரையில் தனது மனைவி குழந்தைகளுடன் பலுான் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது மூன்று வயது பெண் குழந்தை சனிலியா,4; மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கடற்கரை நேரு சிலை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி சனிலியாவை 2 இளைஞர்கள் ஆட்டோவில் கடத்தி செல்வது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், வில்லியனுார் கணுவாப்பேட்டை, புதுநகர், 6வது குறுக்கு தெரு கணேசன் மகன் மூர்த்தி, 20; அவரது கூட்டாளியான பூமியான்பேட்டை, அரசு குடியிருப்பு, பெருமாள் மகன் ஆகாஷ், 19;ஆகியோர், குழந்தை சனிலியாவை பஸ் மூலம் காரைக்காலுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
அதனைத் தொடந்து எஸ்.பி., லட்சுமி சவ்ஜானியா மேற்பார்வையில் சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார், காரைக்கால் பூத்துறையில் பதுக்கி வைத்திருந்த சிறுமி சனிலியாவை மீட்டு, புதுச்சேரிக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில்; காரைக்கால் அம்பகரத்துார், பெரியக்கடை தெருவைச் சேர்ந்தவர் ஜகபர் நாச்சியார்,39; திருமண புரோக்கர்.
இவரது நடவடிக்கை சரியில்லாததால் வீட்டில் சேர்ப்பது இல்லை. நாகூர் தர்காவில் சுத்தம் செய்யும் வேலை செய்து வந்தார்.
புதுச்சேரி வந்து சென்றபோது, வில்லியனுார் கணுவாப்பேட்டை மூர்த்தி, பூமியான்பேட்டை ஆகாஷ் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் பெண் குழந்தை வேண்டும் என்றும், குழந்தையை கடத்தி கொடுத்தால் ரூ. 1.5 லட்சம் தருவதாக கூறி முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை ஜகபர் நாச்சியார் கொடுத்துள்ளார்.
முன்பணம் பெற்றுக் கொண்ட மூர்த்தி மற்றும் ஆகாஷ் 2 நாட்களாக கடற்கரையில் நோட்டமிட்டு, கடந்த 14ம் தேதி, சிறுமி சனிலியாவை கடத்தி சென்று, காரைக்கால் பூத்துறையில் உள்ள ஜகபர் நாச்சியாரிடம் கொடுத்துள்ளார்.
குழந்தை அழாமல் இருக்க வழி நெடுகிலும் பிஸ்கெட், சாக்லெட், ஐஸ்கீரிம் வாங்கி கொடுத்து சென்றுள்ளனர். இந்த குழந்தை நாகூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கேட்டதால் கடத்தி சென்றது தெரியவந்தது.
மேலும் இதே கும்பல் கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் இருந்து 3 வயது பெண் குழந்தையை கடத்தி சென்று நாகூரில் ஒருவரிடம் விற்பனை செய்துள்ள அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மூர்த்தி, ஆகாஷ், ஜகபர் நாச்சியார் ஆகியோரை கைது செய்த பெரியக்கடை போலீசார், மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
சீனியர் எஸ்.பி., பாராட்டு
கடத்தல் வழக்கில் 24 மணி நேரத்தில், புதுச்சேரி கடற்கரை துவங்கி பஸ் நிலையம் வரை உள்ள 100க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர்கள் தனசெல்வம், கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் முருகன், கிழக்கு பிரிவு கிரைம் டீம் பெரியண்ணசாமி, சுரேஷ், லட்சுமிநாராயணன், சத்யமூர்த்தி, ஸ்ரீராம், சந்துரு, அன்பழகன் மற்றும் பெரியக்கடை கிரைம் டீம் லட்சுமிகாந்தன், கனோஜ், இளம்பாரதி, துளசி, இளக்கியவேந்தன் ஆகியோரை சீனியர் எஸ்.பி., சுவாதிசிங் பாராட்டினார்.