புதுச்சேரி ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
புதுச்சேரி ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஏப் 11, 2026 03:59 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிந்து, ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ள இ.வி.எம்., வி.வி.பாட்., இயந்திரங்களின் பாதுகாப்பிற்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இத்தேர்தலில் வரலாறு காணாத அளவில் மொத்தம் 91.23 சதவீதம் ஓட்டு பதிவானது. எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாகவும் சிறப்பாகவும் தேர்தல் நடந்துள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் மொத்தம் 30 சட்டசபை தொகுதிகளக்கான ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், 1,099 ஓட்டுச்சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்) மற்றும் வாக்காளர் சரிபார்க்க கூடிய காகித ஆய்வுத் தட இயந்திரங்கள் (வி.வி.பாட்) ஆகியவற்றை வாக்குப்பதிவு குழுவினருடன் வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது.
புதுச்சேரியில் பெண்கள் பொறியியல் கல்லுாரி, மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக், தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆகிய இடங்களிலும், காரைக்காலில் அண்ணா அரசு கல்லுாரியிலும், மாகேவில் ஜவஹர்லால் நேரு அரசு உயர்நிலைப் பள்ளியிலும், ஏனாமில் டாக்டர் எஸ்.ஆர்.கே. அரசுக் கலைக் கல்லுாரியிலும் வாக்குகள் எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தந்த வாக்குகள் எண்ணும் மையங்களின் வரவேற்பு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் (இ.வி.எம்) வாக்காளர் சரிபார்க்க கூடிய காகித ஆய்வுத் தட இயந்திரங்களும் (வி.வி.பாட்) மற்ற ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு பெறப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்காளர் சரிபார்க்க கூடிய காகித ஆய்வுத் தட இயந்திரங்களும் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் அதிகாலை 2:30 மணிக்குள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி முத்திரையிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அறைகள் சி.சி.டி.வி., கண்காணிப்பு மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப் பட்டுள்ளன.
நேற்று காலை 11:00 மணியளவில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்காளர் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கும், அறிவுறுத்தல்களுக்கும் இணங்க புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.
தேர்தல் பார்வையாளர்கள் 1099 ஓட்டுச்சாவடிகளிலும் எந்த ஒரு ஓட்டுச் சாவடியிலும் மறுதேர்தல் நடத்த வேண்டிய தேவையில்லை என்று பரிந்துரை செய்தனர். இந்த ஆய்வின் போது கலந்து கொண்ட வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் இதனை அனுமதித்துள்ளனர்.
ஆய்வறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வரும் 4ம் தேதி வாக்குகள் எண்ண அனுமதி கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
