‘இன்று நிழல் இல்லா நாள்’ வானியல் நிகழ்வு பள்ளி மாணவர்கள் காண சிறப்பு ஏற்பாடு
‘இன்று நிழல் இல்லா நாள்’ வானியல் நிகழ்வு பள்ளி மாணவர்கள் காண சிறப்பு ஏற்பாடு
ADDED : ஆக 21, 2026 05:31 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று நிழல் இல்லா நாள் என்ற அரிதான வானியல் நிகழ்வினை பள்ளி மாணவர்கள் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி இருதய ஆண்டர் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் இந்நிகழ்வு, இன்று 22ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நிழல் இல்லா நாளின் பின்னணி:: சூரியன் சரியாகத் தலைக்கு மேலே வரும் நாளில், செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள எந்தவொரு பொருளின் நிழலும் தரையில் பக்கவாட்டில் விழாமல், அப்பொருளின் அடிப்பகுதியிலேயே மறைந்துவிடும். இதுவே நிழல் இல்லா நாளின் சுவாரசியம்.
பூமியின் கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதிகளில், ஆண்டில் இரண்டு முறை மட்டுமே இந்த நிகழ்வு சாத்தியமாகும். புதுச்சேரி பகுதியில் வடக்கை நோக்கிய நகர்வில் ஏப்ரல் 21 அன்றும், தெற்கை நோக்கிய நகர்வில் ஆகஸ்ட் 22 அன்றும் நிழல் இல்லா நாள் ஏற்படுகிறது.
பண்டைய காலத்தில் செங்குத்தான குச்சியின் நிழலை வைத்தே நேரத்தையும் பருவகால மாற்றங்களையும் கணித்தனர். அதேபோல், இந்நிகழ்வின் போது மாணவர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி, செங்குத்து குச்சிகளின் நிழல் நீளத்தைக் கவனித்தல், பூமியின் அட்சரேகையைக் கணக்கிடுதல், சூரியனின் சரிவுக் கோணத்தைக் கண்டறிதல் போன்ற சுவாரசியமான அறிவியல் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.
பூமி 23.45 டிகிரி சாய்ந்து சூரியனைச் சுற்றி வருவதால் தான் பருவ காலங்கள் உருவாகின்றன என்பதையும், வானியல் சார்ந்த மூடநம்பிக்கைகளுக்கான உண்மைப் பின்னணியையும் மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பாக அமையும்.
இந்த அரிய வானியல் நிகழ்வைக் கண்டு களிக்கவும், அறிவியலைச் செய்முறையாகக் கற்றுத் தெளிவு பெறவும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் மாநில பயிற்சி மையம், புதுச்சேரி அறிவியல் இயக்கம், பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், இருதய ஆண்டவர் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன.
