புதுச்சேரியில் ஒருங்கிணைந்த போட்டி தேர்வு தேர்வு மையம்:வினாத் தாள் குறித்த புதிய அறிவிப்பு
புதுச்சேரியில் ஒருங்கிணைந்த போட்டி தேர்வு தேர்வு மையம்:வினாத் தாள் குறித்த புதிய அறிவிப்பு
UPDATED : ஆக 19, 2026 08:57 PM
ADDED : ஆக 19, 2026 08:53 PM
புதுச்சேரி: ஒருங்கிணைந்த போட்டி தேர்வில் தேர்வு மையம், வினாத்தாள் சம்பந்தமாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் தேர்வு ஆணையம் மூலம் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான சி.ஜி.எல்., போட்டி தேர்வு 21ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. இந்த போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு, தேர்வு மையங்கள் மற்றும் தாள்கள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக வெவ்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள், ஒவ்வொரு பதவிக்குமான ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்யும்போது, சில பதவிகளுக்கு வெவ்வேறு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கலாம். இந்த குழப்பத்தைத் தவிர்க்க தேர்வு ஆணையம் முக்கிய முடிவினை அறிவித்துள்ளது.
சி.ஜி.எல்., போட்டி தேர்வில் அறிவிக்கப்பட்ட அனைத்துப் பதவிகளுக்கும் தாள்-1 தேர்வு பொதுவானது. எனவே, தேர்வர்கள் தங்களின் வெவ்வேறு ஹால் டிக்கெட்டுகளில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு தேர்வு மையத்திற்குச் சென்று தாள்-1 தேர்வை எழுதலாம்.
யு.டி.சி., பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் தாள்-2 தேர்வையும், தொழில்நுட்பப் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தாள்-2பி தேர்வையும் எழுத வேண்டும். இத்தேர்வுகளுக்கு, அந்தந்த குறிப்பிட்ட பதவிக்கான ஹால் டிக்கெட்டில் ஒதுக்கப்பட்ட மையத்திற்கு மட்டுமே நேரில் சென்று தேர்வெழுத வேண்டும்.
ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளில் ஏதேனும் ஒரு தாளில் தேர்வர் பங்கேற்காவிட்டாலும், சம்பந்தப்பட்ட பணியிடத்திற்கான இறுதித் தகுதிப் பட்டியலில் அவர் பரிசீலிக்கப்பட மாட்டார். எனவே, தேர்வர்கள் தங்களது அனைத்து ஹால் டிக்கெட்டுகளையும் கவனமாக ஆய்வு செய்து, அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி சரியான தேர்வு மையங்களில் ஆஜராகி தேர்வெழுத வேண்டும். இத்தகவலை புதுச்சேரி அரசின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ் குமார் ஜா தெரிவித்துள்ளார்.
