புதுச்சேரியில் உளவுத்துறை போலீசார் ஒட்டுமொத்தமாக டிரான்ஸ்பர்!
புதுச்சேரியில் உளவுத்துறை போலீசார் ஒட்டுமொத்தமாக டிரான்ஸ்பர்!
ADDED : செப் 04, 2026 06:57 PM

புதுச்சேரி: புதுச்சேரி உளவுத்துறையில் பணியாற்றிய, காவல் துறை அதிகாரிகள் எட்டு பேர் மற்றும் காவலர்கள் ஒட்டுமொத்தமாக ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் சமீப காலமாக சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில முக்கிய சம்பவங்கள் மற்றும் உள்கட்சி, அரசியல் நகர்வுகள் குறித்த உளவுத்துறை தகவல்கள் உரிய நேரத்தில் உயரதிகாரிகளுக்கும், அரசுக்கும் சென்று சேரவில்லை.
உளவுத்துறையில் பணியாற்றிய சிலர், தங்கள் பணியில் சுணக்கம் காட்டியதாகவும், கள நிலவரத்தை சரியாக கணித்து அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்றும் மூத்த அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து, உடனடியாக செயல்பட்ட காவல் துறை தலைமை, உளவுத்துறையில் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்த, எட்டு பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. இவர்கள் அனைவரும், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஆயுதப்படைக்கு துாக்கியடிக்கப்பட்டுள்ளனர்.
பழைய அதிகாரிகளை மாற்றிய கையோடு, உளவுத்துறையின் செயல்பாடுகளை துரிதப்படுத்த புதிய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்த அமைப்பிற்கு, மாநிலத்தின் எந்தவொரு சிறிய சலசலப்பும் அரசுக்கு தெரியாமல் போகக்கூடாது; தகவல்களை உடனுக்குடன் சேகரித்து, அறிக்கை அளிக்க வேண்டும் என, கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை, புதுச்சேரி காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
