பாரம்பரிய தமிழர் விளையாட்டு: புதுச்சேரி வீதியில் களை கட்டியது
பாரம்பரிய தமிழர் விளையாட்டு: புதுச்சேரி வீதியில் களை கட்டியது
ADDED : மார் 04, 2024 05:36 AM

புதுச்சேரி : பாரம்பரிய விளையாட்டுகளால் காமாட்சியம்மன் கோவில் வீதி களைகட்டியது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்துமே உடல்நலம்,மன நலம்,சிந்தனை, மொழி,பண்பாடு,கணிதம், வாழ்வியல்,விடாமுயற்சி, நிர்வாகம் என அனைத்தையும் மேம்படுத்துவதாகவே உருவாக்கப்பட்டவை.
ஆனால் இன்றைய குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டை மறந்துவிட்டு மொபைல் கேம்களில் மூழ்கி,மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு வேறு திசையில் செல்லுகின்றனர்.
குறிப்பாக,நகரங்களில் பாரம்பரிய விளையாட்டுகள் மங்கிபோய் உள்ள நிலையில் கட்டடக்கலை வல்லுநர்கள் சுகுனா 34,ஆனந்தி,28 ஆகியோர் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி நகர பகுதியில் ஒரு வீதியை தேர்ந்தெடுத்து அந்த வீதியில் பாரம்பரிய விளையாட்டு திருவிழாவாக முன்னெடுத்து வருகின்றனர்.அந்த வகையில் நான்காம் ஆண்டு பாரம்பரிய விளையாட்டு விழா காமாட்சியம்மன் கோவிலில் நடந்தது.
பல்லாங்குழி,கோலிகுண்டு, கண்ணா வளையல், பம்பரம், சுங்கரகா, டையர் ஓட்டுதல்,ஊஞ்சல் என 15 பாரம்பரிய விளையாட்டுகள் காமாட்சியம்மன் கோவில் வீதியில் களைகட்டியது.
நண்டு சிண்டு,பொட்டு பொடுசு முதல் ஆத்தா,அப்பத்தா,ஐயா,தத்தா,கொள்ளுதத்தா,கொள்ளுப்பாட்டிகளால் அந்த வீதியே திருவிழாக்கோலம் பூண்டி இருந்தது.போட்டிக்போட்டுக்கொண்டு ஆர்வமாக விளையாடி மகிழ்ந்தனர்.
பாரம்பரிய விளையாட்டினை ஒருங்கிணைந்த சுகுனா கூறும்போது,தற்போது பாரம்பரிய விளையாட்டுகள் பல காணாமல் போய்விட்டன.நம் நினைவுகளில் மட்டுமே எஞ்சி இருக்கும் ஒருசில விளையாட்டுகளையாவது இன்றைய தலைமுறையினருக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை துவங்கியுள்ளோம்.தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டினை மீட்டெடுப்போம் என்றார்.
