/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை ஜனாதிபதி வருகை எதிரொலி புதுச்சேரியில் இன்று போக்குவரத்து மாற்றம்
/
துணை ஜனாதிபதி வருகை எதிரொலி புதுச்சேரியில் இன்று போக்குவரத்து மாற்றம்
துணை ஜனாதிபதி வருகை எதிரொலி புதுச்சேரியில் இன்று போக்குவரத்து மாற்றம்
துணை ஜனாதிபதி வருகை எதிரொலி புதுச்சேரியில் இன்று போக்குவரத்து மாற்றம்
ADDED : டிச 29, 2025 05:45 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலையின் 30வது பட்டமளிப்பு விழா மற்றும் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் இன்று புதுச்சேரி வருகிறார்.
அதனையொட்டி, அவர் இன்று டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்திற்கு வருகிறார். அவரை, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர். தொடர்ந்து, போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.
பின்னர், அங்கிருந்து கார் மூலம் காலை 10:30 மணிக்கு கம்பன் கலையரங்கம் செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் குமரகுரு பள்ளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைக்கிறார்.பகல் 12:20 மணிக்கு மூலக்குளத்தில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மதிய ஓய்விற்கு பின், மாலை 3 மணிக்கு காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி , சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து, சர்வதேச மாநாடு மையத்தை திறந்து வைத்து, 100 அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றுகிறார். மாலை 4 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து திருச்சி செல்கிறார்.
பலத்த பாதுகாப்பு: துணை ஜனாதிபதி வருகையையொட்டி, புதுச்சேரியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்பணியில் 1,500 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். லாஸ்பேட்டை விமான நிலையம் முதல் கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்: துணை ஜனாதிபதி செல்லும் நேரங்களில் கடற்கரை சாலை, இந்திரா சதுக்கம், ராஜிவ் சதுக்கம், சிவாஜி சதுக்கம், மறைமலை அடிகள் சாலை, புஸ்சி வீதி, அண்ணா சாலை, செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை, பட்டேல் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
இ.சி.ஆரில் புதுச்சேரி நோக்கி வரும் வாகனங்கள் காலாப்பட்டில் புத்துப்பட்டு அய்யனாரப்பன் கோவில் சந்திப்பு வழியாக திண்டிவனம் சாலைக்கு திருப்பி விடப்படுகிறது.
திண்டிவனம் சாலையில் வரும் வாகனங்கள் மேட்டுப்பாளையம் லாரி முனையம் பத்துக்கண்ணு, வில்லியனுார் வழியாக திருப்பி விடப்படுகிறது.
கடலுார் சாலையில் வரும் வாகனங்கள் தவளக்குப்பம் புறவழிச்சாலை வழியாகவும், இந்திரா சதுக்கம் வழியாக வரும் வாகனங்கள் கடலுார் சாலை உப்பளம் சாலை சோனாம்பாளையம் சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும்.
புதுச்சேரி - கடலுார் பிரதான சாலையில் இந்திரா சதுக்கம் வழியாக வரும் வாகனங்கள அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை, மூலக்குளம் சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும். துணை ஜானதிபதி வந்து செல்லும் சாலைகளில் மாலை 6:00 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

