தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உச்சக்கட்ட போக்குவரத்து நெரிசலால் புதுச்சேரி திணறல்! தொலைநோக்கு திட்டங்கள் அவசியம் தேவை

உச்சக்கட்ட போக்குவரத்து நெரிசலால் புதுச்சேரி திணறல்! தொலைநோக்கு திட்டங்கள் அவசியம் தேவை

உச்சக்கட்ட போக்குவரத்து நெரிசலால் புதுச்சேரி திணறல்! தொலைநோக்கு திட்டங்கள் அவசியம் தேவை


UPDATED : பிப் 07, 2026 07:13 AM

ADDED : பிப் 07, 2026 02:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2026 07:13 AM ADDED : பிப் 07, 2026 02:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் அனைத்து நகர பகுதிகளிலும் உச்சக்கட்டமாக உள்ளது. அடுக்குமாடி பார்க்கிங், மேம்பாலம் உள்ளிட்ட தொலைநோக்கு பார்வை திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே புதுச்சேரி எதிர்காலத்தில் நெரிசலில் இருந்து தப்பிக்க முடியும். புதுச்சேரியில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் மக்களுக்கு தலைவலியாக இருப்பது போக்குவரத்து நெரிசல். ஒரு இடத்திற்கு போய்விட்டு வீடு திரும்புவதற்குள் மக்களுக்கு பெரும்பாடாக உள்ளது.

கடந்த ஒரு வாரமாகவே அனைத்து பகுதிகளிலும், அனைத்து சாலைகளிலும், அனைத்து சிக்னல்களிலும் புதுச்சேரி போக்குவரத்து நெரிசல் நகர பகுதியில் உச்சக்கட்டமாக உள்ளது. சந்து பொந்துகளில் நுழைந்து எப்படியாவது தப்பித்து சென்றுவிடலாம் என்றாலும் அங்கு கூட நெரிசல் இருப்பது தான் உச்சக்கட்ட கொடுமை.

ராஜிவ் சிக்னல் - இந்திரா சிக்னல் இடையே மேம்பாலம் இன்னும் கட்டப்படவில்லை. அதற்கு முன்னரே இப்படி போக்குவரத்து ஒரு நெரிசலா.. இப்பவே கண்ண கட்டுதே... அடுத்து மேம்பாலம் கட்ட துவங்கினால், அந்த நெரிசலை எப்படி புதுச்சேரி சமாளிக்க போகிறது என, மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வி.ஐ.பி.,க்கள் வரும்போது போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தும் போலீசார், மற்ற நேரங்களில் மாயமாகி விடுகின்றனர். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல வழிகள் இருக்கிறது. ஆயுதப்படை பிரிவில் கவாத்து பயிற்சிக்கு பின் போலீசார் சும்மா தான் உள்ளனர். அவர்களை, பீக் ஹவர் நேரங்களில் சாலைகளில் இறக்கிவிட்டு நெரிசலை ஒழுங்குப்படுத்தலாம்.

அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் வீடுகளில் ஆர்டலியாக போலீசார் இருக்கக் கூடாது என, நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், புதுச்சேரியில் இந்த முறை இன்னமும் ஒழிக்கப்படவில்லை. ஆர்டலியாக உள்ள போலீசாரை, போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தலாம்.

எல்லை பாதுகாப்பு படைக்கு இணையாக பயிற்சி முடித்த ஐ.ஆர்.பி., போலீசார், அவர்கள் எடுத்த பயிற்சிக்கு புதுச்சேரியில் வேலையே இல்லை. பல இடங்களில் இவர்களை சும்மா ஒப்புக்கு அழைத்து செல்கின்றனர். இவர்களை போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தலாம்.

புதுச்சேரியில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரணர், இளம் செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தன்னார்வலர்களாக உள்ளனர். இவர்களை சீசன் பறவைகள் போன்று இல்லாமல், வார விடுமுறை நாட்களில் துணைக்கு வைத்து கொண்டால் நகர நெரிசலை முற்றிலுமாக தவிர்க்க முடியும்.

இப்படி ஆயிரம் வழிகள் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இருக்கிறது. ஆனால் ஆட்கள் இல்லை என்று வழக்கமான பழைய பல்லவியையே போக்குவரத்து போலீசார் பாடிக்கொண்டுள்ளனர்.

முன்பெல்லாம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இப்போது புதுச்சேரி சுற்றுலா நகரமாக மாறியுள்ளதால், வெள்ளிக்கிழமையே புதுச்சேரி நெரிசலில் விழி பிதுங்குகிறது. அடுத்து சனி, ஞாயிறு என வார விடுமுறையில் நெரிசல் உச்சக்கட்டமாக உள்ளது. புதுச்சேரியின் போக்குவரத்து நெரிசல் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு இணையாக சென்றுக்கொண்டு இருக்கிறது. ஆனால் 'பார்க்கிங்' வசதி புதுச்சேரியில் சுத்த மோசம். நகர வீதிகளில் பார்க்கிங் திட்டம் சரியாக கையாளப்படவில்லை. வாகன ஓட்டிகளும் அதனை பின்பற்றுவதில்லை. ஒரு அடுக்குமாடி பார்க்கிங் கூட இல்லை.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மேம்பாலங்கள் வரிசையாக கட்டிக்கொண்டே இருக்கின்றனர். மெட்ரோ ரயில் விடுகின்றனர்.

புதுச்சேரியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள், அடுக்குமாடி பார்க்கிங் போன்ற தொலைநோக்கு பார்வை திட்டங்களை முன்னெடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலில் இருந்து புதுச்சேரி தப்பிக்க முடியும்.

போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்

புதுச்சேரியில், முன்பெல்லாம் வீட்டிற்கு ஒரு பைக் இருக்கும். இப்போது ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கார் வைத்துள்ளனர். மக்கள் தொகைக்கு இணையாக 16 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அந்த நெரிசலை சமாளிக்கும் அளவிற்கு போக்குவரத்து போலீசார் இல்லை. 230 போக்குவரத்து போலீசாரை வைத்துக்கொண்டு எப்படி நெரிசலை சமாளிக்க முடியும். எனவே காலத்துக்கேற்ப போக்குவரத்து போலீசாரின் எண்ணிக்கையை 1,500 ஆக அதிகரிக்க வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us