/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாம்பு கடி குறித்து டாக்டர்களுக்கு பயிற்சி
/
பாம்பு கடி குறித்து டாக்டர்களுக்கு பயிற்சி
ADDED : டிச 19, 2025 05:30 AM

புதுச்சேரி: புதுச்சேரி வனத்துறை அலுவலகத்தில், அரசு டாக்டர்களுக்கு பாம்பு கடிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையில் உள்ள டாக்டர்களுக்கு பாம்பு கடியால் பாதிக்கப்படும் மக்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது, பாம்புகளை எவ்வாறு அடையாளம் காண்பது குறித்து பயிற்சி வனத்துறை அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.
கால்நடை துறை இணை இயக்குனர் குமரன் டாக்டர்களுக்கு பயிற்சி அளித்தார். அதில் கண்ணாடி விரியின், கட்டுவிரியன், நல்ல பாம்பு, மலைப்பாம்பு ஆகிய 4 வகையான பாம்புகளை காண்பித்து அதனை எவ்வாறு அடையாளம் காண்பது, அந்த பாம்பின் குணாதிசயங்கள் குறித்தும், பாம்பு கடியில் இருந்து பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது, பாம்பு கடியினை எவ்வாறு அடையாளம் காண்பது, அது விஷம் உள்ள பாம்பா, விஷம் இல்லாத பாம்பா என்பதை எப்படி கண்டு பிடிப்பது என, விளக்கினார். இதில் 10 டாக்டர்கள் குழுவினர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதுவரை 215 டாக்டர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், 'நாங்கள் பணியில் இருக்கும் போது பாம்பு கடிக்காக சிகிச்சைக்கு வருபவர்கள், பாம்பு அல்லது பாம்பை ஒரு புகைப்படம் எடுத்து வந்தால் கூட போதும். பாம்பு கடித்தால் உடனடியாக பதற்றம் அடையக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களை அமைதியாக அமர வைக்க வேண்டும். பாம்பு கடித்த பகுதியில் கயிற்றால் கட்டவோ, கத்தியால் கிழிக்கவோ கூடாது.
அது மேலும் ஆபத்தாக அமையும். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்' என்றனர்.

