/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு மரியாதை
/
சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு மரியாதை
ADDED : நவ 14, 2024 07:28 AM

புதுச்சேரி; புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை, தஞ்சைத் தென்னகப்பண்பாட்டு மையம் இணைந்து, நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின், 102வது நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்தியது.
இதையொட்டி, கருவடிக்குப்பம், சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவிடத்தில், அவரது சிலைக்கு அமைச்சர் திருமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் ஜான்குமார் எம்.எல்.ஏ., கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சிவக்குமார், ஏ.ஐ.டி.யூ.சி., பொதுச்செயலாளர் சேதுசெல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், காந்தி வீதி, ஈஸ்வரன் கோவில் அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் உருவப்படத்துடன் வாகன ஊர்வலம் புறப்பட்டது. தெருக்கூத்து கலைஞர்கள், நாடகக்கலைஞர்கள், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள், தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொட்டும் மழையிலும் புதுச்சேரி, தமிழகம் பகுதிகளை சேர்ந்த நாடகக்கலைஞர்கள் பல்வேறு வேடமிட்டு, நடனமாடியபடி கருவடிக்குப்பம் நினைவிடத்திற்கு சென்றனர்.

