கோவில் நில மோசடி வழக்கில் இருவர் கைது: காரைக்கால் போலீசார் அதிரடி
கோவில் நில மோசடி வழக்கில் இருவர் கைது: காரைக்கால் போலீசார் அதிரடி
ADDED : பிப் 09, 2026 04:55 AM

காரைக்கால்: புதுச்சேரி, காரைக்கால், கோவில்பத்தில் உள்ள ஸ்ரீபார்வதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. அந்த நிலத்தில் பொது மக்களுக்குஎல்.ஜி.ஆர்., மனைப்பட்டா வழங்குவதாக கூறி, மோசடி கும்பல் ஒன்று, சுமார் 185 மனைகளாக பிரிந்து விற்பனை செய்து பலரிடம் பணம் பறித்தது.
இதுகுறித்து மாவட்ட இந்து முன்னணி தலைவர் ராஜ்குமார், நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், மாஜி சப் கலெக்டர் ஜான்சன் தலைமையில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சப் கலெக்டர்ன ஜான்சன், அரசியல் பிரமுகர் ஆனந்த், நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்தி, அவரது மனைவி சுகந்தி உள்ளிட்ட 9 பேரைகைது செய்தனர். இதற்கிடையே, கடந்த 3ம் தேதி போலீசார் மூலம்நில மோசடி வழக்கில் தொடர்பு உடையவர்களின் ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், திருநள்ளாறு அம்பகரத்துார் தாமனங்குடி கண்ணபூர் சாலையை சேர்ந்த துரைராஜ் மகன் சோமசுந்தரம், 58; காரைக்கால், ஒப்பிலாமணியார் கோவில் தெருவை சேர்ந்த முருகையன் மகன் மோகன் 41;ஆகியோரை போலீசார் கோவில் நில மோசடி வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவில் நில மோசடி வழக்கில் மாஜி சப் கலெக்டர் உள்ளிட்ட 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில்,மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
