ADDED : மார் 14, 2024 04:25 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : முன்விரோத தகராறில் தந்தை, மகளை தாக்கிய சகோதரர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் ஞானராஜ், 60; இவரது சகோதரர் அதே பகுதியை சேர்ந்த நாராயணன், 56; இவர்களுக்கிடையே கடந்த பல ஆண்டுகளாக இடப்பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், நாராயணன் தனது வீட்டிற்கு மின் இணைப்பு பணிக்கான வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சத்தம் அதிகமாக இருப்பதாக ஞானராஜ் கேட்டார். அதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த, நாராயணன் தாக்கியதில், ஞானராஜ், இவரது மகள் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
இது குறித்து, ஞானராஜ் கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார், நாராயணன் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
