ADDED : ஏப் 03, 2026 05:18 AM

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் ஜிப்மர் வளாகங்களில், வரும் 15ம் தேதிவரை இருவார சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி ஜிப்மரில் நடந்த துவக்க விழாவில், மூன்று மொழிகளில் சுவச்சதா உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதன் மூலம் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சுத்தமான மற்றும் பசுமையான சூழலை பேணுவதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர்.
மருத்துவ கண்காணிப்பாளர் வினோத்குமார், துணை இயக்குநர் ரங்கபாஷ்யம், கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர் பெட்சி மாதாய், மூத்த மருத்துவ அதிகாரி பிரார்த்தனா, மூத்த நிர்வாக அதிகாரி ஹவா சிங் ஆகியோர் உறுதிமொழியை முன்னிலை வகித்து, சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் நோயாளி பாதுகாப்பு, தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள், பொதுச் சுகாதார முன்னேற்றத்தில் வகிக்கும் பங்கு குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், பராமரிப்பு பணியாளர்களால் அரங்கேற்றப்பட்ட விழிப்புணர்வு நாடகம், சுகாதாரம், கழிவு மேலாண்மை, தனிநபர் துாய்மை மற்றும் சமூக பங்கேற்பின் அவசியத்தை விளக்கப்பட்டது.
சுவச்சதா பக்வாடா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வளாகம் முழுவதும் சுத்தம் செய்யும் இயக்கங்கள், மருத்துவ மற்றும் செவிலியர் மாணவர்களுக்கான போட்டிகள், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
