/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நீட்' தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல்
/
'நீட்' தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல்
ADDED : மார் 10, 2024 04:54 AM
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டிஎ.ஸ்., சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளிலும், முதுகலை மருத்துவப் படிப்புகளிலும் சேர தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5ம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில் இந்தாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இறுதி நாளான நேற்றும் நாடு முழுவதும் இருந்து https://exams.nta.ac.in/NEET என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.
ஆனால், இந்த ஆன்லைனில் கடந்த 20 நாட்களாக புதுச்சேரி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் பரிதவிப்பு வருகின்றனர்.நேற்றும் விண்ணப்பிக்க முடியாமல் அலைந்து திரிந்தது பரிதாபமாக இருந்தது.
மாவட்ட கலெக்டர், சுகாதாரத் துறை செயலரை நேரில் சந்தித்தும் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியவில்லை. மத்திய அரசிடம் கலந்து பேசி எங்களுடைய விண்ணப்பங்களை ஏற்க செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர்.
இது குறித்து புதுச்சேரி மாணவர்கள் கூறியதாவது:
நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பில், ஆதார் எண்ணை வழங்க வேண்டிய அவசியமில்லை என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், விண்ணப்பம் மற்றும் உள்நுழைவு செயல்முறையின் போது ஆதார் எண்ணை சரிபார்க்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.
இது, ஆதார் அட்டை இல்லாத அல்லது ஆதார் அட்டையுடன் மொபைல் எண் இணைக்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைக்காத புதுச்சேரி மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மொபைல் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்க அல்லது பதிவு எண்ணைப் பெறுவதற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகலாம் என்பதால் விண்ணப்பிக்க முடியவில்லை.
இதுதொடர்பாக புதுச்சேரி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலனில்லை. நீட் தேர்வு எங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை என கைவிரித்து விட்டனர்.
மத்திய அரசிடம் கவர்னர், முதல்வர் கலந்து பேசி, எங்களுடைய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள செய்ய வேண்டும்' என்றனர்.

