/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரங்கசாமியுடன் அமித்ஷா கூட்டணி பேச்சுவார்த்தை! பிரதமர் வருகைக்கு முன்பாக சிக்கல்களை தீர்க்க முயற்சி; மாநில அந்தஸ்து கோரிக்கை அழுத்தமாக வலியுறுத்தல்
/
ரங்கசாமியுடன் அமித்ஷா கூட்டணி பேச்சுவார்த்தை! பிரதமர் வருகைக்கு முன்பாக சிக்கல்களை தீர்க்க முயற்சி; மாநில அந்தஸ்து கோரிக்கை அழுத்தமாக வலியுறுத்தல்
ரங்கசாமியுடன் அமித்ஷா கூட்டணி பேச்சுவார்த்தை! பிரதமர் வருகைக்கு முன்பாக சிக்கல்களை தீர்க்க முயற்சி; மாநில அந்தஸ்து கோரிக்கை அழுத்தமாக வலியுறுத்தல்
ரங்கசாமியுடன் அமித்ஷா கூட்டணி பேச்சுவார்த்தை! பிரதமர் வருகைக்கு முன்பாக சிக்கல்களை தீர்க்க முயற்சி; மாநில அந்தஸ்து கோரிக்கை அழுத்தமாக வலியுறுத்தல்
UPDATED : ஜன 06, 2026 04:56 AM
ADDED : ஜன 06, 2026 04:12 AM

புதுச்சேரி: புதுச்சேரிக்கு பிரதமர் வர உள்ள சூழ்நிலையில் கூட்டணி தொடர்பாக முதல்வர் ரங்கசாமியுடன்,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். தேர்தல் வியூகங்கள்,கூட்டணி கட்சிகள் தொடர்பாக இருவரும் நீண்ட நேரமாக விவாதித்தனர். இரட்டை இன்ஜின் ஆட்சியான என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி அரசு கடைசி ஸ்டாப்பினை நோக்கி சென்று கொண்டுள்ளது. கையில் இருக்கும் ஓரிரு மாதங்களுக்குள் அறிவித்த திட்டங்களை செயல்படுத்திவிட்டு மக்களை சந்தித்துவிடலாம் என்று முதல்வர் ரங்கசாமி கணக்கு போட்டு கொண்டு நலத்திட்டங்களை வேகப்படுத்தி கொண்டு இருக்க, அரசு அதிகாரிகளிடம் சுத்தமாக ஒத்துழைப்பு இல்லை.
நிதி நிலைமை காரணம் காட்டி அதிகாரிகள் திட்டங்களுக்கு அடுத்தடுத்து முட்டு கட்டை போட்டு வருகின்றனர். அதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் பா.ஜ., தலைவர்கள் வரிசையாக சந்தித்து சமாதானப்படுத்தி வருகின்றனர். என்.ஆர்.காங்.,- பா.ஜ., இடையே சமரசம் ஏற்பட்டாலும் முதல்வருக்கு நிர்வாக ரீதியாக எந்த பிரச்னையும் இன்னும் தீரவில்லை. நிர்வாக விஷயங்களில் கவர்னர்-முதல்வர் இடையிலான மோதல் இன்னும் நீருபூத்த நெருப்பாகவே உள்ளுக்குள் இன்னும் புகைந்து கொண்டு இருக்கின்றது.
ரங்கசாமி எதிர்பார்க்கும் பல முக்கிய கோப்புகளுக்கு அதிகாரிகளிடமிருந்து சமீபகாலமாக எந்த கிரீன் சிக்னலும் இல்லை. கோப்பு போனாலும் இறுதி முடிவு எடுக்க முடியாத அளவிற்கு விளக்கம் கேட்டு திரும்பி வந்துவிடுகின்றது. அண்மையில் கூட முதியோர் உதவித்தொகை ௫௦௦ ரூபாய் உயர்விற்கான கோப்பு விளக்கம் கேட்டு அதே வேகத்தில் திரும்பி வந்தது. இதுவே ரங்கசாமியின் அதிருப்திக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இது போன்ற சூழ்நிலையில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி புதுச்சேரி வர திட்டமிட்டுள்ளார். அப்போது புதுச்சேரி வளர்ச்சிக்கான பல்வேறு முக்கிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளார். புதிய திட்டங்களையும் துவக்கி வைக்க உள்ளார்.
அதற்கு முன்பாக தேர்தல் கூட்டணி தொடர்பாக இறுதி செய்ய பா.ஜ., திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றது. பிரதமர் வருகைக்கு முன்பாக நிர்வாக சிக்கல்களை தீர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் எதிரொலியாக, கூட்டணி தொடர்பாக முதல்வர் ரங்கசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது, முதல்வர் ரங்கசாமி, மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதே புதுச்சேரி மக்களின் எண்ணமாகவும் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அதை அறிவிக்க வேண்டும் என ஒற்றை கோரிக்கையை வலுவாக முன் வைத்துள்ளார் தொடர்ந்து சட்டசபை தேர்தல் கூட்டணி, வியூகங்கள் தொடர்பாகவும் இருவரும் விவாதித்தனர்.
பிரதமர் மோடி மீதும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தனக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்பினால் தான் புதுச்சேரி வளர்ச்சி பாதையில் செல்லுகிறது என மேடையில் முதல்வர் ரங்கசாமி பாராட்டி வருகிறார். இருப்பினும் டில்லி சென்று இன்னும் பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. இப்போது புதுச்சேரிக்கே வர உள்ள பிரதமரை வரவேற்க முதல்வர் ரங்கசாமி ரெடியாகி வருகிறார்.

