'வி.சி.க., வேட்பாளர்களுக்கு பானை சின்னம் கிடையாது'
'வி.சி.க., வேட்பாளர்களுக்கு பானை சின்னம் கிடையாது'
ADDED : மார் 26, 2026 08:44 PM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வி.சி.க., கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கப்படாது என, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள வி.சி.கட்சி சட்டசபை தேர்தலில் நெட்டப்பாக்கம், ஊசுடு, உழவர்கரை தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. அதில், நெட்டப்பாக்கம் வேட்பாளருக்கு கட்சியின் ஏ, பி, படிவம் வழங்கப்படாததால் பரிசீலனையில் சுயேச்சையாக தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஊசுடு, உழவர்கரை தொகுதிகளில் கட்சி சார்பில், போட்டியிட தாக்கல் செய்த வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. இருப்பினும், கட்சியின் மூலம் அவர்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எதுவும் அளிக்கப்படவில்லை. இதனால், வி.சி.,கட்சி சார்பில் போட்டியிட்டாலும், அவர்களுக்கு சுயேச்சை சின்னங்கள் தான் வழங்கப்படும் என, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், புதுச்சேரியில் த.வெ.க., கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் நேயம் மக்கள் கட்சிக்கு 'குக்கர்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
