/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தம் ராஜிவ் சிக்னல் - மரப்பாலம் வரை 'இடையூறு'
/
சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தம் ராஜிவ் சிக்னல் - மரப்பாலம் வரை 'இடையூறு'
சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தம் ராஜிவ் சிக்னல் - மரப்பாலம் வரை 'இடையூறு'
சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தம் ராஜிவ் சிக்னல் - மரப்பாலம் வரை 'இடையூறு'
ADDED : ஜன 14, 2025 06:18 AM
புதுச்சேரி: ராஜிவ் சிக்னல்- மரப்பாலம் வரை சாலையை ஆக்கிரமித்து வரிசையாக நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசார் தயக்கம் காட்டி வருவதால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் ராஜிவ் சிக்னல் துவங்கி மரப்பாலம் வரை நுாறடிச்சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது. நிமிடத்திற்கு நுாற்றுக்கணக்கான வாகனம் இச்சாலையை கடந்து செல்கிறது.
தென் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் வெளியூர் வாகனங்கள், உள்ளூர் வாகனங்கள் அதிகம் பயணிக்கும் இச்சாலையை அரசு 100 அடி அகலமாக விரிவாக்கம் செய்தது. ஆனால் அந்த நோக்கம் சீர்குலைக்கப்பட்டு வருகிறது.
நுாறடி சாலையின் இரு பக்கமும் தாறுமாறாக மாத கணக்கில் நிறுத்தி வைக்கும் வாகனங்களால், மற்ற வாகனங்கள செல்ல முடியாத நிலை ஏற்பட்டுகிறது.
ராஜிவ் சிக்னலில் இருந்து கல்வித்துறை வரை, கிரேன், பஸ்கள், ஓட்டலுக்கு வரும் கார்கள் சாலையில் தாறுமாறாக நிறுத்தி வைக்கின்றனர்.
இந்திரா சிக்னல் முதல் மேம்பாலம் வரை, தனியார் பார்சல் கம்பெனியின் 5 லாரிகள், ரெக்கவரி வேன் உள்ளிட்டவை நிறுத்தப்படுகிறது.
போக்குவரத்து துறையில் இருந்து மரப்பாலம் வரை, கார் உதிரிபாகம் பொறுத்தும் கடைகள், கார்களை சாலையின் நடு பகுதிவரை நிறுத்தி உதிரிபாகம் பொறுத்துகின்றனர். மரவாடி எதிரில் கிரேன்கள், லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கின்றனர்.
காமாட்சி ஓட்டலில் இருந்து இந்திரா சிக்னல் வரை, ஒட்டுமொத்த சாலையையும் கார் உதிரி பாகங்கள் பொறுத்தும் கடை உரிமையாளர்கள் 10 அடி அகல சாலையை மட்டும் விட்டு வைத்து விட்டு ஆக்கிரமித்து கொள்கின்றனர். இந்திரா சிக்னலில் இருந்து குழந்தைகள் மருத்துவமனை வரை எதிர் திசையில் வரும் வாகனங்களாலும், மருத்துவமனையில் இருந்து அக்கார்டு ஓட்டல் ப்ரிலெப்ட் வரை சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு, தாறுமாறான வாகன நிறுத்தத்தால் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் எரிச்சலுக்கு ஆளாகின்றனர்.
இப்படி 3 கி.மீ., துார சாலையில இவ்வளவு விதிமீறல்கள் இருந்தும், வடக்கு போக்குவரத்து போலீசார் இதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் செல்வது பொதுமக்கள் இடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.