மொரட்டாண்டி டோல்கேட்டில் தொழில்நுட்ப கோளாறு அணி வகுத்து நின்ற வாகனங்கள்
மொரட்டாண்டி டோல்கேட்டில் தொழில்நுட்ப கோளாறு அணி வகுத்து நின்ற வாகனங்கள்
ADDED : மே 25, 2026 05:48 AM

புதுச்சேரி: புதுச்சேரி - திண்டிவனம் சாலை, மொராட்டாண்டி டோல்கேட்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. பல மணி நேரம் காத்திருந்த வாகன ஓட்டிகள், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
நேற்று ஞாயிற்று கிழமை வார விடுமுறை நாள் என்பதால் புதுச்சேரி - திண்டிவனம் சாலை, மொரட்டாண்டி டோல்கேட் வழியாக மாலை முதல் ஏராளமான வாகனங்கள் சென்றன. இரவு 7:00 மணிக்கு மேல் டோல்கேட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக வாகனங்களுக்கான சுங்க கட்டண க்யூ ஆர் கோடு காண்பிக்கப்படவில்லை. இதனால் டோல்கேட்டை கடந்து செல்வதற்கு வாகனங்கள் தாமதமானதுடன் ஏராளமான வாகனங்கள் பல கி.மீ., அணிவகுத்து நின்றன.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் வேலையில் ஈடுபட்டு வருவதாக ஊழியர்கள் கூறினாலும் வாகன ஓட்டிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க முடியாமல், ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இரவு 8:30 மணிக்கு மேல் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு டோல்கேட் வழியாக வாகனங்கள் பழையபடி சென்றன.
