போக்குவரத்து விதி மீறிய வாகனங்களுக்கு ரூ. 80 ஆயிரம் அபராதம் விதிப்பு
போக்குவரத்து விதி மீறிய வாகனங்களுக்கு ரூ. 80 ஆயிரம் அபராதம் விதிப்பு
ADDED : ஏப் 17, 2026 11:40 PM

புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீசார் நடத்திய வாகன சோதனையில், விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
புதுச்சேரி நகரில் சாலை விபத்துகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளைப் பொதுமக்கள் முறையாகக் கடைபிடிப்பதை உறுதி செய்யவும் போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம் அருகே நேற்று மாலை கிழக்கு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து எஸ்.பி., ரச்சணா சிங் தலைமையில், இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி உள்ளிட்ட போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதிக சத்தம் எழுப்பக்கூடிய மற்றும் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை பயன்படுத்திய 13 வாகனங்கள் கண்டறியப்பட்டன. அந்த வாகனங்களுக்கு தலா ரூ.5,000 வீதம், மொத்தம் 65,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல், ஹெல்மெட் அணியாமல் சென்றது, அதிவேகமாக பைக் இயக்கியது, மொபைல் போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது மற்றும் ஒரே பைக்கில் மூன்று பேர் பயணித்தது போன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 15 இருசக்கர வாகனங்களுக்கு தலா ஆயிரம் வீதம், மொத்தம் 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சோதனையில் மொத்தம் 80,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல், வாகன ஓட்டிகளுக்குச் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கிய எஸ்.பி., ரச்சணா சிங் கூறுகையில், 'வரும் காலங்களில் விபத்தில்லா புதுச்சேரியை உருவாக்க விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். இது போன்ற வாகன சோதனை தொடர்ந்து நடக்கும் எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்' என்றார்.
